

இஸ்ரேலிய மாணவர்கள் இருவர் கடத்தப்பட்டது தொடர்பாக மேலும் 50 பாஸ்தீனர் களை இஸ்ரேலிய ராணுவம் திங்கள்கிழமை கைது செய்தது.
இதன் மூலம் கைது செய்யப்பட்டுள்ள ஹமாஸ் உறுப்பினர் களின் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மேற்கு கரையில் ஹமாஸ் அமைப்பினரின் செயல் பாடுகளை முடக்கும் வகையில், அந்த அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் பாலஸ்தீன சட்டமன்ற முன்னாள் சபாநாயக ருமான அஜீஸ் டெவீக்கை இஸ் ரேல் பாதுகாப்பு படை (ஐ.டி.எப்) திங்கள்கிழமை கைது செய்துள்ளது.
இஸ்ரேலிய மாணவர்களான காலித் ஷயர் (16), நிப்தாலி ஃப்ரெங்கெல் (19) ஆகிய இருவரும், மேற்கு கரையில் கடந்த வியாழக்கிழமை கடத்திச் செல்லப்பட்டனர். தீவிரவாத ஹமாஸ் அமைப்பி னரே இவர்களை கடத்திச் சென்றுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள் ளார். இதனை ஹமாஸ் மறுத்துள்ளது.
மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டதை பாலஸ்தீன அதிபர் மகமுது அப்பாஸும் கண்டித் துள்ளார். இதனிடையே மேற்கு கரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேல் பாதுகாப்பு படையுடன் ஏற்பட்ட மோதலில் பாலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடத்தப்பட்ட மாணவர்களை மீட்பது தொடர்பான நடவடிக்கை களை இஸ்ரேல் பாதுகாப்பு படைத் தளபதி பென்னி கன்ட்ஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வு செய்தார். இதையடுத்து மேற்கு கரைப் பகுதியில் இஸ்ரேலிய படை வீரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
நிதியை முடக்க திட்டம்
இந்நிலையில் இஸ்ரேல் கேபினட் அமைச்சர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஹமாஸ் தலைவர்கள் சிலரை மேற்கு கரையில் இருந்து வெளியேற்றி, காசா முனைக்கு அனுப்புவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டது.
ஹமாஸ் அமைப்புக்கு நிதி செல்வதை தடுக்கும் வகையில் அந்த அமைப்புடன் தொடர்புடைய சில நிறுவனங்களை முடக்கவும் இஸ்ரேல் திட்டமிட்டு வருகிறது.