

தென் அமெரிக்க நாடான பெருவில் அடுத்தடுத்து 2 கடும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
பிரேசில் எல்லையை ஒட்டியுள்ள கிழக்கு பெருவில் உள்ளூர் நேரப்படி மாலை 5.45 மணிக்கு 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பூமியில் 169 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பெரு தலைநகர் லிமாவில் இருந்து வடகிழக்கே 688 கி.மீ. தொலைவிலும் இபெரியா நகரில் இருந்து வடமேற்கே 169 கி.மீ. தொலைவிலும் நிலநடுக்க மையப் பகுதி காணப்பட்டது.
இந்நிலையில் அடுத்த 5 நிமிடங்களில் அதே வலு கொண்ட மற்றொரு நிலநடுக்கம் அதே பகுதியைத் தாக்கியது. இதன் மையப் பகுதி வேறாக இருந்தது. இதையடுத்து 3 முறை பிந்தைய அதிர்வுகள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கங்களால் பெருவின் பல்வேறு நகரங்கள் மற்றும் வடக்கு சிலி, அர்ஜென்டினா, பொலிவியா, கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும் பாதிப்பு குறித்த தகவல் இல்லை.
நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியில் பெரு அமைந்துள்ளது. பெருவில் கடந்த 2007, ஆகஸ்ட் 15-ம் தேதி ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் (7.9 ரிக்டர்) 595 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.