

‘பன்முகத்தன்மையே நாட்டின் பலம்’ என்று லண்டனில் 60 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக பிரிட்டனுக்கு சென்றார். கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அங்கு சென்றுள்ள பிரதமருக்கு அங்கு வசிக்கும் இந்தியர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் சார்பில் வெம்ப்லி மைதானத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மோடியை அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, கேமரூன் மனைவி சமந்தா இந்திய பாரம்பரியப்படி சேலை அணிந்தபடி உடன் இருந்தார்.
பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக கதகளி, பரதநாட்டியம், குச்சிப்புடி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய நடனங்கள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர் மோடி பேசும்போது, “உங்களுடைய உற்சாகமான வரவேற்பு சொந்த நாட்டில் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. 100-க்கு மேற்பட்ட மொழிகள் 1,500 கிளை மொழிகள், பல்வேறு சாதி, மதங்களைச் சேர்ந்தவர்கள் இருந் தாலும் ஒற்றுமையாக வசித்து வருகின்றனர். இதுவே இந்தியா வின் பலமாகவும் பெருமைமிகு விஷயமாகவும் விளங்குகிறது. தொலைக்காட்சி செய்திகளிலும், நாளிதழ்களிலும் வெளியாகும் செய்திகள் மட்டுமே இந்தியாவை எடை போடுவதற்கான அளவு கோல் அல்ல. 125 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா அதைவிட மிகப்பெரியது.
ஜேம்ஸ் பாண்ட், ருப்பி பாண்ட்
“பாண்ட் என்றதும் நினைவுக்கு வருவது ஜேம்ஸ் பாண்ட் கதா பாத்திரம்தான். இதுமட்டு மல்லாமல் புரூக் பாண்ட் டீயையும் நினைவுபடுத்துகிறது. ஜேம்ஸ் பாண்ட் நம்மை மகிழ்விக்கிறது (கேளிக்கை). இதுபோல், புரூக் பாண்ட் நம்மை உற்சாகப்படுத்திகிறது. ஆனால் இப்போது கேளிக்கை, உற்சாகத்தையும் தாண்டி வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டி உள்ளது. ஆம் ஜேம்ஸ் பாண்ட், புரூக் பாண்டுக்கு அடுத்தபடியாக இப்போது ருப்பி பாண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு உங்கள் ஆதரவு தேவை” என்றார்.
இந்திய ரயில்வேயின் ஒரு பிரிவான இந்தியன் ரயில்வே பைனான்சியல் கார்ப்பரேஷன் வெளிநாடுகளில் ரூ.6,500 கோடி நிதி திரட்டுவதற்காக, ருப்பி பாண்டை அறிமுகம் செய்துள்ளது. அதில் முதலீடு செய்ய வேண்டும் என்று மோடி சூசகமாக தெரிவித்தார்.