

கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடன் வெறுப்பின்மையை விடுத்து பழைய நிலைக்கு செல்ல முன்வர வேண்டும் என்று மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள மசூதியில் போப் பிரான்சிஸ் உரையாற்றினார்.
குறிப்பாக மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் வன்முறை ஏற்படுவதை ஊக்குவிக்க வேண்டாம் என்று அவர் கூறினார். கிறிஸ்தவ ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் மிகுந்த பாதுகாப்பு அச்சுறுத்தலை மீறி போப்பின் இந்த உரை நிகழ்ந்தது.
போப் பிரான்ஸிஸ் முதல் முறையாக ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
கென்யா தலைநகர் நைரோபி சென்ற அவர், அங்கிருந்து பதற்றம் நிறைந்த மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்றார். அவரது 3 நாள் பயணத்தில் மிகவும் அச்சுறுத்தல் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்ட மத்திய கவுடோகுவோ மசூதியில் முஸ்லிம் மக்களின் இடையே அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சகோதர - சகோதரிகளாகவே வாழ்ந்தனர். அத்தகைய நிலைக்கு நாம் மீண்டும் செல்ல வேண்டும். கடவுள் மீது நம்பிக்கை கொண்ட அனைத்து ஆண்களும் பெண்களும் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.
வெறுப்பின்மைக்கு நாம் அனைவரும் எதிராக நிற்க வேண்டும். மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் வன்முறை ஏற்படுவதை துளி அளவும் ஊக்குவிக்க கூடாது" என்றார் போப் பிரான்சிஸ்.
போப் உரை நிகழ்த்திய இந்த மசூதி கடந்த 2013-ல் உள்நாட்டு போரின்போது கிறிஸ்தவ ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுமார் 15,000 முஸ்லிம்களை பிணைக் கைதிகளாக கொண்ட இடமாகும். தற்போதும் அங்கு கிறிஸ்தவ கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் உள்ளது.