

உலகிலேயே மிக ஆபத்தான பாலங்களில் ஒன்றாக இருக்கிறது ரஷ்யாவின் குவாடின்ஸ்கை பாலம். விடிம் நதி மீது 570 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம், 2 மீட்டர் அகலமே கொண்டது. பாலத்தின் இருபக்கங்களிலும் தடுப்புச் சுவர்களோ, கம்பிகளோ இல்லை. சற்றுத் தடுமாறினாலும் கீழே உறைந்திருக்கும் ஆற்றில் விழவேண்டியதுதான். இரும்புக் கம்பிகள் மீது மரப் பலகைகளை வைத்து, பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பாலம் கட்டப்பட்டாலும் முறையாகத் திறந்து வைக்கப்படவில்லை. அருகில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 1500 குடும்பங்கள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன. பாலம் கட்டி முடிக்கப்பட்ட இந்த 30 வருடங்களில் ஒருமுறைகூட பாதிப்புகளைச் சரி செய்ததில்லை. இந்த ஆபத்தான பாலத்தில் கார், பெரிய ட்ரக் போன்ற வாகனங்கள் வந்து செல்கின்றன. சிறிது சக்கரங்கள் நகர்ந்தாலும் ஆற்றில் விழவேண்டிய ஆபத்து தெரிந்தாலும் மக்கள் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. மன தைரியமுடைய மிகச் சிறந்த வாகன ஓட்டிகளே இந்தப் பாலத்தில் வாகனங்களை ஓட்டிச் செல்வதால், விபத்துகள் நிகழ்வதில்லை என்பது ஆறுதலானது.
ஆபத்தை ஏன் விலை கொடுத்து வாங்கணும்?
கனடாவில் வசிக்கிறார்கள் லெஸ்லி, டக் ஃபேஸி தம்பதியர். கஸகிஸ்தானில் வசிக்கும் 4 வயது கிரில் என்ற சிறுவனை மிகவும் விரும்பி தத்தெடுத்திருக்கிறார்கள். கிரிலுக்குப் பிறக்கும்போதே ஒரு கை இல்லை. குறைபாடு காரணமாக அவனது பெற்றோர், காப்பகத்தில் விட்டுவிட்டனர். கனடா திரும்பிய கிரிலுக்கு விமான நிலையத்தில் ஓர் ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. ஃபேஸியின் தந்தை கிறிஸ் ஒரு கையோடு, பொம்மைகளைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார். கிரிலுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கிறிஸ் கீழே உட்கார்ந்து, ஒரு கையை நீட்டி, கிரில்லை வரவேற்றார். ’’என்னைப் போலவே என் பேரனும் ஒரு கையுடன் இருக்கிறான். இந்தக் கையை வைத்தே என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும். உனக்கு இன்னொரு கையாக இந்தக் குடும்பம் இருக்கும்’’ என்று கிறிஸ் கூறியதைக் கேட்டு அனைவரும் நெகிழ்ந்து போய்விட்டனர்.
கிரில்லுக்கு எவ்வளவு அன்பான குடும்பம் கிடைத்துவிட்டது!
அமெரிக்காவில் உணவு, மருந்து கழகம் மரபணு மாற்றப்பட்ட ஒரு மீனை, உணவில் சேர்த்துக்கொள்ள அனுமதி அளித்திருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட சாலமன் மீன்கள் 2018-ல் விற்பனைக்கு வர இருக்கின்றன. அட்லாண்டிக் சாலமன் மீன்கள் முதிர்ச்சியடைவதற்கு 3 ஆண்டுகளை எடுத்துக்கொள்கின்றன. மரபணு மாற்றத்தின் மூலம் ஒன்றரை ஆண்டுகளில் சாலமன்கள் முதிர்ச்சியடைந்து விடுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். இயற்கை ஆர்வலர்களோ மரபணு மாற்றம் செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மரபணு மாற்றம் ஏற்படும்போது சாலமன் மீன்களின் இயல்பான தன்மையே மாறிவிடும். சூழலும் மாறும். பிற உயிரினங்களும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கிறார்கள்.
மனிதனால் இன்னும் என்னென்ன விளைவுகளை இந்தப் பூமி சந்திக்க இருக்கிறதோ…