

கடந்த 1921-ல் எடித் கோவன் என்ற பெண்மணி ஆஸ்தி ரேலிய நாடாளுமன்ற உறுப்பி னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறை ஒரு பெண்ணுக்கு இப்பெருமை கிடைத்தது. (இந்த இடத்தில் வேறொரு முக்கியத் தகவலையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். 1924-ல் குடிமகன்கள் அத்தனைபேரும் தேர்தலில் கட்டாயம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் அரங் கேறியது). ஆனால் அவர் கூறிய ஒரு கருத்து கடும் விமர்சனத் துக்கு உள்ளானது. ‘‘இல்லத் தரசிகள் குடும்பத்துக்காக எவ் வளவு உழைக்கிறார்கள். எனவே அவர்களுக்கும் அந்தந்த குடும்பத் தலைவர் நியாயமான ஊதியத்தைத் கொடுக்க வேண்டும்’’. இது பலத்த சர்ச்சைகளை எழுப்பியது. பலவிதங்களில் அவர் நிந்திக்கப் பட்டார். என்றாலும் அவரது வாதத்தின் நியாயம் காலப்போக் கில் உணரப்பட்டது. பின்னர் ஆஸ்திரேலியாவில் அச்சிடப்பட்ட கரன்ஸியில் அவர் உருவமும் இடம் பெற்றது.
1930-க்களில் பங்குச் சந்தை யில் பெரும் வீழ்ச்சி. ஆஸ்திரேலி யாவுக்கு அளித்த கடனைத் திருப்பித் தருமாறு பிரிட்டிஷ் வங்கிகள்கூட நிர்பந்தம் அளித்தன. தொழிலாளர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது. அரசின் செல வுகள் கட்டுப்படுத்தப்பட்டன. என்றாலும் மூன்றில் ஒரு பங்கு ஆஸ்திரேலியர்கள் வேலை யில்லாத நிலையில், தொழிலாளர் கட்சி அரசின் தலைவரான ஜேம்ஸ் ஸ்கல்லின் என்பவர் ஆஸ்திரேலியாவின் பிரதமராகவும் விளங்கினார். அந்த நாட்டின் முதல் கத்தோலிக்கப் பிரதமர் இவர்தான். ஆனால் பொருளாதாரச் சீர்குலைவு காரணமாக இவர் பதவி இறங்க நேரிட்டது. அதே தொழிற் கட்சியைச் சேர்ந்த ஜோசப் லியான்ஸ் என்பவர் (இவர் முன்னாள் ஆசிரியர் மற்றும் டாஸ்மேனியாவின் பிரதமர்) பிரதமர் ஆனார்.
ஆஸ்திரேலியா பற்றி எழுதும் போது கிரிக்கெட் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. கிரிக்கெட் விளையாட்டில் ஆஸ்திரேலி யாவின் பங்கு முக்கியமானது.
1932-33 என்பது உலக கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியா வித்தி யாசமான ஒரு சூழலுக்கு ஆளானது. அது இங்கிலாந்துக்கு ஒரு கருப்புப் புள்ளியும் கூட. ‘’பாடிலைன்’’ என்ற பெயரில் இது பிரபலமானது. கிரிக்கெட் ஒரு கனவான்களின் ஆட்டம் என்பது தவிடு பொடியானது.
டான் பிராட்மேனை கேப்டனாக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு கடும் அதிர்ச்சி. 1933 ஜனவரியில் நடைபெற்றது அந்தப் பரபரப்பான நிகழ்வுகள்.
டான் பிராட்மேன் அன்று ஆங்கிலேய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். அவரது சராசரி ரன் என்பது 139 என்பதாக இருந்தது. தவிர இந்தியா-பாகிஸ்தான் அணிகளைப் போல அப்போது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இரண்டு அணி களும் கடும் பகைவர்கள். இங்கி லாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் டக்ளஸ் ஜார்டைன். ‘‘பிராட்மேனை எப்படி வீழ்த்துவது?’’ இதுதான் ஜார்டைனின் முக்கிய சவாலாக இருந்தது. தனது மார்புக்கு அருகே பவுன்சாகி வரும் பந்தை அடிக்க பிராட்மேன் சிரமப்படுகிறார் என்பதை அறிந்ததும் ஹரால்டு லார்வுட் என்ற தனது அணி பந்து வீச்சாளரைக் கூப்பிட்டு ஒரு திட்டம் தீட்டினார் ஜார்டைன்.
வேகமாகப் பந்து வீசுவது, விக்கெட்டின் லெக்ஸ்டம்பின் அருகே மிக உயரமாக எழும்படி பந்தை வீசுவது. பேட்ஸ்மேனுக்கு இதில் பெரும் சங்கடம். நகர்ந்தால் விக்கெட் விழுந்துவிடும். பந்தை அடித்தால் மிக அருகில் நின்றி ருக்கும் ஃபீல்டர்களில் ஒருவர் பிடித்து விடுவார். இரண்டையும் செய்யவில்லை என்றால் பலத்த அடிபடும்.
அதேசமயம் கிரிக்கெட் விதிகளின்படி இப்படிப் பந்து வீசக் கூடாது என்பதல்ல.
இந்த வகைப் பந்துவீச்சு காரண மாக விளையாட்டு மைதானத்தில் கடும் அதிர்ச்சிகள் உண்டாயின. அதுவும் ஆஸ்திரேலிய ஃபீல்டு மேனான பெர்ட் ஓல்டுஃபீல்டு தலையில் பந்தினால் அடிபட்டு கீழே வீழ்ந்ததும் மைதானத்தில் இருந்த 50000 பேரும் தங்கள் எதிர்ப்பைக் காட்டி எழுந்து நின்றனர். இங்கிலாந்து அணி விளையாட்டு வீரர்கள் நடுங்கிப் போனார்கள். எப்படித் தப்பிக்கலா மென்று யோசித்தனர். பந்து வீச்சாளர் ஹரால்டு லார்வுட் தனது அணியினரிடம் ‘’பார்வையாளர்கள் நம்மைத் தாக்க வந்தால் ஸ்டம்ப்புகள் மூலம் நாமும் தாக்கலாம்’’ என்றார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. என்றாலும் பாடிலைன் வகைப் பந்து வீச்சு இங்கிலாந்துக்கு அவப் பெயரைக் கொண்டு வந்தது. அதே சமயம் ‘‘இது ஜெயிப்பதற்கான ஒரு வியூகம். சட்ட மீறலும் அல்ல. எனவே இந்த சாமர்த்தியம் பாராட்டப்பட வேண்டும்’’ என்று கூறுபவர்களும் உண்டு.
(உலகம் உருளும்)