

நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் அமோக வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே சமயம் மொத்தம் உள்ள 664 இடங்களில், பெரும்பான்மைக்கு தேவையான 329 இடங்களை பிடிக்க மேலும், 38 இடங்களே சூச்சி கட்சிக்கு தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் ராணுவ ஆதரவு பெற்ற ஐக்கிய ஒருமைப்பாடு மற்றும் மேம்பாட்டுக் கட்சி (யுஎஸ்டிபி) ஆட்சி நடத்தி வருகிறது.
மியான்மர் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 664 இடங்களில், தற்போது வரை, 291 இடங்களை ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கைப்பற்றி இருப்பதாக அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதே சமயம் பெரும்பான்மைக்கு தேவையான 329 இடங்களுக்கு மேலும் 38 இடங்களை ஆங் சான் சூச்சி கைப்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் முழுமை யாக வெளியாவது கால தாமதமாகி வருவதால், ராணுவ ஆதரவு பெற்ற ஆளுங்கட்சியான ஐக்கிய ஒருமைப்பாடு மற்றும் மேம்பாட்டு கட்சி தனது தோல்வியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதே சமயம் ஆங் சான் சூச்சி கட்சிக்கு தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளது. தவிர, தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்பதாகவும் தெரிவித்துள்ளது. மியான்மர் அதிபர் தெயின் செயினும், ஆங் சான் சூச்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாகி உள்ளது.