Published : 20 Mar 2021 03:14 AM
Last Updated : 20 Mar 2021 03:14 AM

50 லட்சம் கரோனா தடுப்பூசி பெறுவதில் தாமதம்- இந்தியாவிடம் பிரிட்டன் பேச்சுவார்த்தை

50 லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான பேச்சுவார்த்தையில் பிரிட்டன் ஈடுபட்டுள்ளது.

பிரிட்டனில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தற்போது அமல்படுத்தப்பட்டு இருக்கும் பொது முடக்கத்தை தளர்த்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் சீரம் அமைப்பு தயாரித்து வரும் அஸ்ட்ராஜெனக்கா தடுப்பு மருந்தை பிரிட்டன் பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிடமிருந்து 50 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை இந்த மாதத்தில் பெற பிரிட்டன் முடிவு செய்திருந்தது.

அதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பிரிட்டனில் அடுத்த 4 வாரங்களில் தடுப்பூசி போடும் நடவடிக்கை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், வரும் ஜூலை மாத இறுதிக்குள், பிரிட்டனில் அனைத்து முதியோரும் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் திட்டமிட்டபடியே நடைபெறுவதாக அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் மே மாதம் முதல், தடுப்பு மருந்து விநியோகம் பிரிட்டனில் சீராக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹான்காக் கூறும்போது, “இந்தியாவிடமிருந்து 50 லட்சம் கரோனா தடுப்பு மருந்துகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தடுப்பூசி போடப்படும் பணிகளின் வேகம் குறையும். வரும் ஜூலைக்குள் அனைத்து முதியோருக்கும் தடுப்பூசி போடப்படும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றார்.

இந்நிலையில் இந்திய அரசின் அனுமதி இல்லாமல் பிரிட்டனுக்கு கூடுதலாக தடுப்பு மருந்துகளை அனுப்பும் திட்டம் இல்லை என்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைமைச் செயல் அதிகாரி அடார் பூனாவால் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “ஏற்கெனவே 50 லட்சம் கரோனா தடுப்பு மருந்துகளை அனுப்ப இந்திய அரசு அனுமதி அளித்திருந்தது. எனவே அதை அனுப்பவுள்ளோம். கூடுதலாக மருந்துகளைப் பெற வேண்டும் என்றால் இந்திய அரசிடமிருந்து பிரிட்டன் அரசு அனுமதியைப் பெறவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்,.

கூடுதலாக மருந்துகளைப் பெற வேண்டும் என்றால் இந்திய அரசிடமிருந்து பிரிட்டன் அரசு அனுமதியைப் பெற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x