

பிரான்ஸ் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நாட்டில் சிரியா அகதிகள் தங்கியிருந்த முகாம் தீ வைத்து எரிக்கப் பட்டது.
பிரான்ஸின் வடக்குப் பகுதியில் கலாய்ஸ் நகரம் உள்ளது. அங்குள்ள புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் சிரியா மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியிருந் தனர். இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீவிரவாதிகள் நேற்றுமுன்தினம் இரவு கொடூர தாக்குதல்களை நடத்தினர். அடுத்த சில மணி நேரங்களில் கலாய்ஸ் அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 40 கூடாரங்கள் எரிந்தன.
எனினும் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று அகதிகள் அனைவரையும் உயிரோடு காப்பினர். முகாமுக்கு யார் தீ வைத்தார்கள் என்பது தெரியவில்லை. எனினும் பாரீஸ் தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில் அகதிகள் முகாம் தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிரியா, இராக், ஆப்கானிஸ்தா னில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி வருகின்றனர்.
அவர்களை ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அரவணைத்து வருகின்றன. இந்நிலையில் பாரீஸில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் அகதிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
துருக்கி மற்றும் கிரீஸ் நாட்டின் தீவுப் பகுதிகளுக்கு இப்போதைய நிலையில் நாள்தோறும் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட அகதிகள் கரையேறி வருகின்றனர். அவர் களின் நிலைமை கேள்விக் குறியாகி உள்ளது.