Published : 16 Nov 2015 09:27 AM
Last Updated : 16 Nov 2015 09:27 AM

கரிகாற்சோழன் விருது வழங்கும் விழா: மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது

‘கரிகாற்சோழன் விருது வழங்கும் விழா’ மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நேற்று தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர், முனைவர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் 7-வது ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக் கட்டளை நிறுவியுள்ள சிங்கப்பூர் தமிழறிஞர் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை சார்பில் சிங்கப்பூர், மலேசிய எழுத்தாளர்களின் சிறந்த நூலுக்கு ஆண்டுதோறும் கரிகாற் சோழன் விருது வழங்கப்படுகிறது.

2014-ம் ஆண்டுக்கான விருதுக்கு மலேசிய தமிழ் எழுத்தாளர் பெ. ராஜேந்திரன் எழுதிய ‘பண்பின் சிகரம் பத்மா’, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் ஷாநவாஸ் எழுதிய ‘அயல் பசி’ ஆகிய நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இவ்விருது வழங்கும் விழா கோலாலம்பூரில் நேற்று நடை பெற்றது. இவ்விழாவில் பெ.இராஜேந்திரன், ஷாநவாஸ் ஆகியோருக்கு மலேசிய கல்வித் துறை துணை அமைச்சர் ப.கமல நாதன், ‘கரிகாற்சோழன் விருது’ வழங்கிப் பாராட்டினார்.

விழாவில் துணைவேந்தர் க.பாஸ்கரன் பேசும்போது, ‘‘கரிகாற் சோழன் நெல் வளத்தால் தமிழகத் தையே செழிக்கச் செய்ததுபோல் விருது பெற்ற படைப்பாளிகளும் தங்களது சொல் வளத்தால் தமிழ் இலக்கியத்தைச் செழிக்கச் செய்வார்கள் என நம்புகிறேன். இவர்களுக்கு துணை நிற்கும் முஸ்தபா தமிழ் அறக்கட்டளைக்கு நன்றி கூறுகிறேன்’’ என்றார்.

மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் ம.மன்னர்மன்னன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா.ஆண்டியப்பன், அறக்கட்டளை நிறுவனர் சிங்கப்பூர் முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ்க் கல்வித் துறைத் தலைவர் முனைவர் சா.உதயசூரியன் தகுதியுரை நிகழ்த்தினார்.

விருது பெற்றவர்களைப் பாராட்டிப் பேசிய மலேசிய கல்வித் துறை துணை அமைச்சர் ப.கமல நாதன், ‘‘இளம் எழுத்தாளர்களை ஈர்க்கும் வகையில் இப்பரிசுத் திட் டத்தில் விரிவாக்கம் நிகழ வேண்டும். வரும் ஆண்டு மலேசியாவில் ‘தமிழ்க் கல்வியின் 200 ஆண்டு கால வரலாற்றுப் பெருவிழா’ அரசாங்க அங்கீகாரத்தோடு நடை பெறவுள்ளது’’ என்றார்.

விருது விழாவில் பாராட்டுரை வழங்கிய ‘தி இந்து’ தமிழ் பதிப்பு ஆசிரியர் கே.அசோகன் பேசும்போது, ‘‘மலேசியத் தமிழர் களின் தமிழ்ப் பற்று உண்மை யிலேயே மெய்சிலிர்க்க வைக் கிறது. அடுத்த ஆண்டு முதல் இலங்கை தமிழ் எழுத்தாளர்களும் இவ்விருது பெறுவார்கள் என்கிற அறிவிப்பால் உலகமெங்கும் தமிழ்ப் படைப்பிலக்கியம் வளர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார். விருது பெற்ற எழுத்தாளர்களின் ஏற்புரைக்குப் பின்னர் குணநாதன் நன்றியுரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x