

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இதுவரை 138 பேர் பலியாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், “ மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. இதுவரை மியான்மர் போராட்டத்தில் 138 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்ட்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து யாங்கூன், மண்டேலா போன்ற பகுதிகளில் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.
இதுதொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.