Published : 14 Mar 2021 03:14 AM
Last Updated : 14 Mar 2021 03:14 AM

பாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுத்து சிங்கக் குட்டியுடன் போட்டோ எடுத்த புதுமணத் தம்பதிக்கு கடும் கண்டனம்

சிங்கக் குட்டிக்கு மயக்க மருந்துகொடுத்து, அதனுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த புதுமணத் தம்பதிக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் ஒரு ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. புதுமணத் தம்பதிகள் சிங்கக் குட்டியுடன் மேடையில் போட்டோ எடுத்துக் கொண்டது தற்போது பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

லாகூரில் உள்ள ‘ஸ்டுடியோ அப்சல்’ என்ற இடத்தில் புதுமணத் தம்பதிகள் சிங்கக் குட்டியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவற்றைப் பார்த்தநெட்டிசன்கள் புதுமணத் தம்பதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏனெனில், மேடையில் சிங்கக் குட்டி மயக்கமான நிலையில் பரிதாபமாக இருக்கிறது. அதற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பின்னர் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஜேஎப்கே விலங்குகள் மீட்பு மற்றும் பராமரிப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். தவிர ‘சேவ் தி வைல்ட்’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்தச் சிங்கக் குட்டியைக் காப்பாற்ற வேண்டும் என்றுஏராளமானோர் குரல் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஜேஎப்கே நிறுவனர் ஜூல்பிஷான் அனுஷே கூறும்போது, ‘‘நண்பர் ஒருவர் ஸ்டுடியோவுக்கு சிங்கக் குட்டியை தூக்கி வந்ததாகவும், அப்போது புதுமணத் தம்பதிகள் அத்துடன் போட்டோ எடுத்துக் கொண்டதாகவும், இந்த நிகழ்ச்சி எதேச்சையாக நடந்தது என்றும் ஸ்டுடியோ தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், சிங்கக் குட்டி இன்னும் ஸ்டுடியோவில்தான் இருக்கிறது. அதை மீட்டு காப்பாற்ற வேண்டும். புகைப்படம் எடுத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x