முன்னாள் பிரதமர் மகனை கைது செய்ய ஆணை: வங்கதேச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் மகனை கைது செய்ய ஆணை: வங்கதேச நீதிமன்றம் உத்தரவு

Published on

வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் வங்கபந்து ஷேக் முஜிபுர் ரகுமான் பாகிஸ்தானின் நண்பர் என விமர்சித்ததற்காக, முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானுக்கு எதிராக 2-வது முறையாக கைது ஆணை பிறப்பித்துள்ளது வங்கதேச நீதிமன்றம்.

வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) துணைத் தலைவரான தாரிக் (50), கடந்த செப்டம்பர் 29-ம் தேதி லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசும்போது, “ஷேக் முஜிபுர் ரகுமான் வங்கபந்து அல்ல, பாக்பந்து (பாகிஸ்தான் நண்பர்). என் தந்தை ஜியா உர் ரகுமான்தான் வங்கதேசத்தின் முதல் அதிபர். ஷேக் முஜிபுர் ரகுமான் வங்கதேசத்தின் தந்தையாக இருக்கமுடியாது. அவர் பாகிஸ்தான் பாஸ்போர்ட் மூலம் நாட்டுக்குத் திரும்பினார். வங்கதேச சுதந்திரத்துக்குப் பிறகும் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை ஒருவர் ஏற்றுக் கொண்டால் சட்டப்படி அவர் பாகிஸ்தான் குடிமகனாகவே கருதப்படுவார்” எனக் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக வங்கபந்து அறக்கட்டளை தலைவர் மோசியுர் மாலிக் வழக்கு தொடுத்தார். தாரிக், தவறாகவும் உள்நோக்கத்துடனும் பேசியதாக மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த டாக்கா பெருநகர குற்றவியல் நீதிமன்றம் தாரிக்கை கைது செய்ய ஆணை பிறப் பித்தது. இது, தாரிக்குக்கு எதிராக பிறப்பிக்கப்படும் இரண்டாவது கைது ஆணையாகும்.

முன்னதாக, அவாமி லீக் கட்சி பொதுக்கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக கடந்த ஏப்ரலில் இன்டர்போல் அமைப்பினர் ரெட் நோட்டீஸ் விநியோகித்துள்ளனர்.

2007-ம் ஆண்டு ராணுவ ஆட்சியின்போது தாரிக் கைது செய்யப்பட்டார். 2008-ல் மருத்துவ சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்த அவர், பிரிட்டன் சென்றார். அங்கிருந்து நாடு திரும்பவில்லை.

முன்னாள் பிரதமர் ஜியா, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கருத்து தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in