Published : 12 Mar 2021 07:54 AM
Last Updated : 12 Mar 2021 07:54 AM

அமெரிக்காவில் உலகப் போர்களில் ஏற்பட்ட உயிரிழப்பைவிட கரோனா பலி அதிகம்: ஜோ பைடன் வருத்தம்

இரு உலகப் போர்கள், வியட்நாம் போர், செப் 11 தீவிரவாத தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் கூட்டுத்தொகையைவிட அமெரிக்காவில் கரோனா பலி அதிகம் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வருத்தம் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபரான பின்னர் முதன்முறையாக அவர் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:

ஓராண்டுக்கு முன்னர் நாம் ஒரு வைரஸ் தொற்றால் தாக்கப்பட்டோம். அப்போது அந்தத் தொற்றத் தடுத்து நிறுத்தாமல் நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் மவுனம் காக்கப்பட்டது. அதன் விளைவு தொற்று பரவல், உயிர்ப்பலிகள், அழுத்தம், தனிமை.
2019ல் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் பலரின் வாழ்க்கையில் நினைவுப் பொருளாக மாறியுள்ளது. ஒவ்வொருவரின் துயரமும் சற்றே வித்தியாசமாக இருந்தாலும் நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இழப்பை சந்தித்துள்ளோம். நாம் கூட்டத் துயரத்தை எதிர்கொண்டோம். கூட்டத் தியாகங்களும் இந்தத் தொற்றுக் காலத்தில் நடந்துள்ளது.
2020ம் ஆண்டு உயிர்ப் பலிகள் நிறைந்த ஆண்டாக, நம் வாழ்வாதாரம் தொலைந்த ஆண்டாக அமைந்துவிட்டது. ஆனால் அந்த நெருக்கடியிலும் நன்றிக்கடன், மரியாதை, பாராட்டுகள் என சில நல்ல விஷயங்களையும் பெற்றிருக்கிறோம். அமெரிக்கா எப்போதுமே இருளில் ஒளியைத் தேடும் உத்வேகம் கொண்ட நாடு.

அமெரிக்காவில் கரோனாவால் இதுவரை 5,27,726 பேர் பலியாகியுள்ளனர். இது, இரு உலகப் போர்கள், வியட்நாம் போர், செப் 11 தீவிரவாத தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் கூட்டுத்தொகையைவிட அமெரிக்காவில் கரோனா பலி அதிகம்.

கரோனா பலியால் மனைவியை இழந்த கணவர்கள், கணவனை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், தாத்தா, பாட்டி, நண்பர்களை இழந்தோர் என நிறைய பேர் தனிமையில் விடப்பட்டுள்ளனர்.’இந்த நேரத்தில் நான் அவர்கள் அனைவரையும் நினைவு கூர்கிறேன்.

இவ்வாறு அதிபர் பைடன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x