Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM

பாகிஸ்தானில் மீட்கப்பட்ட வாய் பேச முடியாத, காது கேளாத இந்தியப் பெண் கீதா தன் தாயுடன் இணைந்தார்

கராச்சி

பாகிஸ்தான் கராச்சி ரயில் நிலையத்தில் தொண்டு நிறுவனத்தினால் 11 வயதில் கண்டெடுக்கப்பட்ட வாய் பேச முடியாத, காது கேளாதஇந்தியப் பெண் கீதா பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையான தாயுடன் இணைந்துள்ளார்.

பாகிஸ்தான் கராச்சியில் ஆதரவற்று, இருக்க இடமி ல்லாமல் சுற்றித் திரிந்துகொண்டிருந்த வாய் பேச முடியாத, காது கேளாத 11 வயது இந்தியச் சிறுமியை பாகிஸ்தானில் உள்ள உலகப் பிரபல தொண்டு நிறுவனமான எத்தி சமூக அறக்கட்டளை மீட்டெடுத்தது. அறக்கட்டளையின் உரிமையாளர் பில்கூஸ் எத்தி கீதாவை தன் மகள் போல் வளர்த்துவந்தார்.

2015-ல் இந்திய மற்றும் பாகிஸ்தான் ஊடகங்களில் கீதா குறித்த விவரங்கள் வெளியானது. இதையடுத்து அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சிறுமி கீதாவை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துவருவதற்கான முயற்சி களை மேற்கொண்டார்.

உண்மையான தாய்

கீதா இந்தியா அழைத்துவரப் பட்டு ஐந்தாண்டுகள் கழித்து தற்போதுதான் அவர் தனது உண்மையான தாயுடன் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்ட்ராவில் உள்ள நைகோன் கிராமத்தில் வசித்துவந்த தாய் மீனாவை கீதா அடையாளம் கண்டுள்ளதாகவும், டிஎன்ஏ சோதனையில் அவர்தான் கீதாவின் தாயார் என்பதும் உறுதி ஆகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தாய் மறுமணம்

கீதாவின் உண்மையான பெயர் ராதா வாக்மேர் என்று அவரது தாயார் மீனா கூறியுள்ளார். மேலும் கீதாவின் உண்மையான தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாகவும், பின்னர்மறுமணம் செய்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது கீதா தாயாருடன் அதே கிராமத்தில் வசித்துவருகிறார்.

இதுகுறித்து எத்தி அறக்கட்டளை உரிமையாளர் பில்கூஸ் எத்தி கூறும்போது, “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கீதா தன் உண்மையான தாயுடன் இணைந்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. அறக்கட்டளை மையத்தில் கீதாவை மகள் போல் பார்த்துவந்தேன். வாய் பேசாத, காது கேளாத அவளுடன் சைகை மொழியில்தான் பேசி வந்தோம்.

முதலில் அவளுக்கு பாத்திமா எனப் பெயரிட்டோம். பின்னர் அவள் இந்து என்று தெரிந்ததும் கீதா என மாற்றினோம். உறவுகளை இவ்வளவு ஆண்டுகள் பிரிந்து இருப்பதெல்லாம் எல்லோருக்குமே துயரமான ஒன்று. அதுவும் கீதா போன்றவர்களுக்கு அது இன்னும் கொடுமை” என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x