Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM

இந்தியாவால் கரோனாவில் இருந்து மீளும் உலகம்: அமெரிக்க மூத்த விஞ்ஞானி புகழாரம்

புதுடெல்லி

இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறனால் கரோனாவில் இருந்து உலகம் மீண்டு வருகிறது என்று அமெரிக்க மூத்த விஞ்ஞானி பீட்டர் ஜே ஹோர்டஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்காவின் பீலார் பல்கலைக்கழக தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான பீட்டர் ஜே ஹோர்டஸ் (62) கடந்த 10 ஆண்டுகளாக கரோனா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த வைரஸ் அச்சுறுத்தல் எப்போது நீங்கும் என்பது குறித்து அண்மையில் நடைபெற்ற காணொலி கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

இந்தியாவின் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் கரோனா தடுப்பூசி உற்பத்தி திறனால் கரோனா வைரஸ் பிடியில்இருந்து உலகம் மீண்டு வருகிறது.கரோனா வைரஸை கட்டுப்படுத்தஇந்திய அரசு மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.ஒட்டுமொத்த உலகத்துக்கும் அந்த நாடு முன்னுதாரணமாக உள்ளது.

அமெரிக்காவில் மீண்டும் கரோனா அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதை தடுக்க தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.நா. சபையின் துணை பொதுச்செயலாளர் அனிதா பாட்டியா கூறும்போது, "உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்து வருகிறது. தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா உலகத்துக்கு வழிகாட்டுகிறது. இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர்,ஆப்பிரிக்காவை சேர்ந்த ஏழைநாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. அதேநேரம் வளர்ந்த நாடுகள் தடுப்பூசிகளை அதிகமாக வாங்கி குவித்துவருகின்றன. இது தவறான முன்னுதாரணம். ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசிகளை பகிர்ந்து வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அஸ்ட்ரா ஜெனிகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கண்டுபிடித்துள்ள கரோனா தடுப்பூசியை இந்தியாவின் புனே நகரை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் 'கோவிஷீல்டு' என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசிக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஒரு மாதத்தில் 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் ஒரு மாதத்தில் 1.5 கோடி கோவேக்ஸின் தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்து வருகின்றன. மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x