

பிரிட்டன் அரச குடும்பத்தினர் நிறவெறி பிடித்தவர்கள் என்று நான் நினைக்கவில்லை என்று மேகன் மார்கலின் தந்தை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் ஆகிய இருவரும் இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாகக் கடந்த ஆண்டு அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து அரச குடும்பத்தினருடன் ஆலோசனை நடந்தது. அவர்களின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார்.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் இனிமேல் ஒருபோதும் பெருமைக்குரிய இளவரசர், இளவரசி பட்டங்களைப் பயன்படுத்த மாட்டார்கள். மக்களின் வரிப் பணத்தையும் பெற மாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
ஹாரி - மேகன் மார்கல் அரச குடும்பத்திலிருந்து விலகியது குறித்துப் பல்வேறான கட்டுரைகளை பிரிட்டன் பத்திரிகைகள் வெளியிட்டு வந்தன. இவற்றுக்கெல்லாம் எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் ஹாரியும் மேகன் மார்கலும் மவுனம் காத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஹாரியும், மேகனும் கனடா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தனர். இந்த நிலையில் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் மனம் திறந்து பேசியுள்ளனர். இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
அதில் பேசிய ஆப்பிரிக்க அமெரிக்கரான மேகன் மார்கல், ''நான் கர்ப்பமாக இருந்த காலங்களில் என் மகன் பிறந்த பிறகு எவ்வளவு கருப்பாக இருப்பானோ என்று அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர். 'அவனுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாது, அவனுக்கு இளவரசர் பட்டம் சூட்டப்படாது' என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. நிறைய முறை இனி உயிர் வாழக் கூடாது என்று நினைத்திருக்கிறேன்.
உளவியல் சிக்கல் இருப்பதாக அரச குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஒருவரிடம் உதவி கோரினேன். அவர், 'என்னால் உதவ முடியவில்லை. அது குடும்பத்துக்கு உகந்ததில்லை' என்றார். தற்போது எங்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறக்க இருக்கிறது'' என்று மேகன் மார்கல் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மேகனின் நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் மேகன் மார்கலின் குற்றச்சாட்டு குறித்து அவரது தந்தை தாமஸ் மெர்கல் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தாமஸ் மெர்கல் கூறும்போது, “பிரிட்டன் அரச குடும்பத்தினர் நிறவெறி பிடித்தவர்களாக இருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. நான் அரச குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். லாஸ் ஏஞ்சல்ஸில்தான் நிறவெறி இருக்கிறது. நான் பிரிட்டனில் நிறவெறி இருக்கும் என்று நம்பவில்லை. ஆனால், பிறக்கப் போகும் குழந்தை என்ன நிறமாக இருக்கப் போகிறது என்று கேட்பது முட்டாள்தனமானது” என்று தெரிவித்துள்ளார்.