Published : 08 Mar 2021 01:37 PM
Last Updated : 08 Mar 2021 01:37 PM

அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி அறிவியல் ஆசிரியரை மணந்தார்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவியும், உலகின் பணக்காரப் பெண்மணியுமான மெக்கின்சி ஸ்காட், சியாட்டிலைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரை மறுமணம் செய்துள்ளார்.

ஜெஃப் பெசோஸ் உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமேசானைத் தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மெக்கின்சியைக் காதலித்து, திருமணம் செய்துகொண்டார். 1994-ல் அமேசான் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர்கள் இருவரின் திருமணம் 1993 செப்டம்பரில் நடந்தது.

26 ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கும் 2019-ம் ஆண்டு விவாகரத்தானது. அதன் பிறகு அமேசான் நிறுவனத்தின் 4 சதவீதப் பங்குகள் இவர் வசமாகின. இதன் மூலமும் பிற சொத்துகள் மூலமும் மெக்கின்சி ஸ்காட், உலகின் பணக்காரப் பெண்களில் ஒருவராக மாறினார்.

இந்நிலையில் மெக்கின்சி ஸ்காட், சியாட்டிலைச் சேர்ந்த தனியார் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் டான் ஜ்வெட்டை மறுமணம் செய்துள்ளார். இதுகுறித்து மெக்கின்சி அமேசான் செய்தித் தொடர்பாளர் மூலம் கூறும்போது, ''டான் ஒரு சிறந்த நபர். இப்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளேன். இருவரும் உற்சாகமாக உணர்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

டான் கூறும்போது, ''நான் அறிந்தவரை மிகவும் பெருந்தன்மை கொண்ட மற்றும் அன்பான ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளேன். பிறருக்கு உதவும் பணியில் மெக்கின்சியுடன் நானும் இணைகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மெக்கின்சி ஸ்காட், தன்னுடைய சொத்தில் இருந்து 5.9 பில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x