Published : 08 Mar 2021 01:03 PM
Last Updated : 08 Mar 2021 01:03 PM

கடலில் மூழ்கி இறந்த சிறுவன் அய்லான் குர்தியின் தந்தையைச் சந்தித்துப் பேசிய போப் ஆண்டவர்

வேறு நாட்டுக்குச் செல்ல முயலும்போது கடலில் மூழ்கி இறந்த சிரிய நாட்டைச் சேர்ந்த சிறுவன் அய்லான் குர்தியின் தந்தையை போப் பிரான்சிஸ் நேற்று சந்தித்துப் பேசினார்.

2015-ம் ஆண்டு சிரியாவின் கொபேனி நகரைச் சேர்ந்த அப்துல்லா குர்தி தனது குடும்பத்தினருடன் துருக்கி நாட்டுக்கு அகதியாகச் செல்லும்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இதில் அப்துல்லாவின் மனைவி ரேஹன், குழந்தைகள் காலீப், அய்லான் ஆகியோர் உயிரிழந்தனர். இதில் 3 வயதுக் குழந்தை அய்லானின் உடல், துருக்கியின் கோஸ் தீவின் போட்ரம் கடற்கரையில் ஒதுங்கியது.

கடற்கரை மணலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போன்ற குழந்தையின் புகைப்படம் உலகத்தையே உலுக்கியது. அந்த ஒரு புகைப்படத்தின் தாக்கத்துக்குப் பிறகு பல்லாயிரக்கணக்கான அகதிகளுக்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அடைக்கலம் அளித்தன. தற்போது அய்லான் குர்தியின் தந்தை அப்துல்லா குர்தி இராக்கிலேயே வசித்து வருகிறார்.

இதற்கிடையே ஈராக்கில் பொது நிகழ்ச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்ட 84 வயதான போப் பிரான்சிஸ், இராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள அரபில் பகுதியில் அப்துல்லா குர்தியைச் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து வாட்டிகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''அப்துல்லா குர்தியுடன் போப் ஆண்டவர் நீண்ட நேரம் பேசினார். தனது குடும்பத்தை இழந்த தந்தையின் வலியை போப் பிரான்சிஸால் உணர முடிந்தது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ள்து.

சிரியப் போரால் இதுவரை 3.87 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். வாழ்விடங்கள் பறிக்கப்பட்டதாலும், அழிக்கப்பட்டதாலும் லட்சக்கணக்கான மக்கள் வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். இந்தப் போரை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x