

புதிய தேர்தல் தொடர்பாக தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளோம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி கூறும்போது, “புதிய அரசுகள் ஜனநாயகம் மூலமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நாங்கள் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். சர்வதேச சமூகத்தின் துணையுடன் சுதந்திரமான, நியாயமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய தேர்தல்களை நடத்துவது குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக நிற்கிறோம்.
அதிகாரத்தைப் பெற மக்களின் வாக்கு முக்கியமானது. யார் வேண்டுமானலும் ஒரு காகிதத்தில் ஒரு கற்பனையை எழுதலாம். ஆப்கானிஸ்தானுக்கு ஒரு தீர்வைப் பரிந்துரைக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரசு - தலிபான்கள் இடையேயான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்கா தலைமையில் கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் அமெரிக்கப் படைகள் சிறிது சிறிதாக ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.
இருப்பினும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. அவ்வப்போது குண்டுவெடிப்புச் சம்பங்களில் தலிபான்கள் ஈடுபடுவதும் தொடர்கதையாக உள்ளது.