Published : 06 Mar 2021 05:08 PM
Last Updated : 06 Mar 2021 05:08 PM

 2 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்து; 20 நாடுகளுக்கு அனுப்பப்பட்டன: உலக சுகாதார அமைப்பு

2 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்து 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர், “ கோவாக்ஸ் திட்டத்திற்கு இது சிறப்பான வாரமாகும். (தேவை உள்ள நாடுகளுக்கு கரோனா தடுப்பு ஊசிகளை விநியோகிக்க கொண்டுச் செல்லப்படும் திட்டமே கோவாக்ஸ். உலக சுகாதார அமைப்பு உருவாக்கிய கோவாக்ஸ் திட்டத்தில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட பல நாடுகள் உள்ளன)

முதல் கரோனா தடுப்பூசி பணி கானாவில் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி கரோனா தடுப்பூசிகள் 20 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் 1 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்துகள் 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளன. மொத்தமாக கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் 51 நாடுகளுக்கு வழங்கப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சுமார் 130 நாடுகள் ஒரு டோஸ் கரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை. வெறும் 10 நாடுகளுக்கு சுமார் 75% கரோனா தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது நியாயமற்றது. அனைத்து நாடுகளுக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் சென்றடைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்திருந்தது.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x