மியான்மர் ராணுவ சேனல்கள் முடக்கம்: யூடியூப் நிர்வாகம் அதிரடி

மியான்மர் ராணுவ சேனல்கள் முடக்கம்: யூடியூப் நிர்வாகம் அதிரடி
Updated on
1 min read

மியான்மர் ராணுவம் சார்ந்து இயங்கும் 5 சேனல்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சி தொடங்கியதற்கு எதிராக போராட்டக்காரர்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை யாங்கூன் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் ராணுவத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது.

அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதில் நேற்று முன் தினம் மட்டும் 38 பேர் பலியாகினர். இதுவரை ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் 50 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் மியான்மர் ராணுவ வீடியோ பக்கங்கள் யூடியூப் சேனலில் முடக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து யூடியூப் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ எங்கள் விதிமுறை மற்றும் சட்டங்களுக்கு எதிராக இருந்த மியான்மர் ராணுவத்தின் 5 யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

என்ன நடக்கிறது மியன்மரில்?

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங்சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபிடாவ், யாங்கூன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இதன் காரணமாக இணையச் சேவை நாட்டின் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in