எவ்வளவு நாள் லாக்டவுனில் இருக்க முடியும்?- கரோனா மரணங்களை கண்டு அழுது குறை கூறுவதை நிறுத்துங்கள்: பிரேசில் அதிபர் காட்டம்

எவ்வளவு நாள் லாக்டவுனில் இருக்க முடியும்?- கரோனா மரணங்களை கண்டு அழுது குறை கூறுவதை நிறுத்துங்கள்: பிரேசில் அதிபர் காட்டம்
Updated on
1 min read

கரோனாவினால் ஏற்படும் இறப்புகளைப் பார்த்து அழுது குறை கூறுவதை நிறுத்துங்கள் என்று பிரேசிலியர்களிடம் அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனோரா கூறியுள்ளார்.

பிரேசிலில் கரோனாவால் ஏற்படும் இறப்புகள் இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 74, 285 பேர் கரோனாவால் பாதிக்கப்பட, 1,786 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் கரோனாவுக்கான பலி அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா, இதற்கு பதிலளித்துள்ளார்.

ஜெய்ர் போல்சனோரா கூறும்போது, “ நீங்கள் எவ்வளவு காலம் குறை சொல்லி அழுது கொண்டு புலம்புவீர்கள். எவ்வளவு நாள் வீட்டிலேயே இருப்பீர்கள். இதனை யாராலும் இனி பொறுத்துக் கொள்ள முடியாது. நான் மரணத்துக்கு வருந்துகிறேன். இதற்கான தீர்வை விரைவில் கண்டுப்பிடிப்போம்” என்றார்.

உலகம் முழுவதும் கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின.

சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.

சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in