Published : 05 Mar 2021 08:27 AM
Last Updated : 05 Mar 2021 08:27 AM

காஷ்மீரில் எடுத்து வரும் நடவடிக்கைக்கு வரவேற்பு; இந்தியாவின் பாதுகாப்பில் அக்கறை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் உறுதிமொழி

இந்த ஆண்டு இதுவரையில் இந்தியாவுக்கு 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பான அமெரிக்க அரசின் அக்கறையை காட்டுகிறது என்று பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பைடன் அரசின் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, ‘இந்த ஆண்டு இதுவரையில் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட பாதுகாப்புத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடர்பாக அமெரிக்க அரசின் அக்கறையைக் காட்டுகிறது’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலையை இயல்புக்கு கொண்டுவர இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அமெரிக்க அரசு வரவேற்பதாக கூறினார். காஷ்மீர் தொடர்பான அமெரிக்க அரசின் கொள்கையில் மாற்றங்கள் இல்லை என்று அவர் தெரிவித்தார். அமெரிக்க அதிபராக பைடன் பொறுப்பேற்ற பிறகு வெளியுறவுக் கொள்கை சார்ந்து சில மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. இந்நிலையில் ஹெச் - 1பி விசா தொடர்பான சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பைடனுக்கு இரண்டு செனட்டர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

ஹெச் -1பி விசாக்களை அதிக ஊதியம் வழங்கும் நிறுவனங்களுக்கு முதலில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதன் பிறகே மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்று டிரம்ப் தலைமையிலான அரசு ஜனவரி மாதத்தில் அறிவித்தது. இந்த புதிய நடைமுறையை பைடன் அரசு தள்ளி வைத்தது. இந்நிலையில், ‘ஹெச்-1பி விசாவை பல நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளிலிருந்து குறைந்த ஊதியத்தில் ஆட்களை வேலைக்கு நியமிக்கின்றன. இதனால் அமெரிக்கர்கள் வேலை இழக்கின்றனர். எனவே, ஹெச் -1பி விசா வழங்குவது தொடர்பான சீர் திருத்தங்களை கால தாமதம் செய்யாமல் உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்ததில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x