

தமது நாட்டிலிருந்து 300 ராணுவ ஆலோசகர்களை இராக் அனுப்புகிறார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.
இராக் பிரச்சினைக்கு ராஜீய உறவு வழியில் தீர்வு காண்பதற்காக இந்த பிராந்தியத்துக்கு வெளியுறவு அமைச்சர் ஜான் எப். கெர்ரியும் அனுப்பப்படுகிறார்.
கெர்ரி செல்வதன் நோக்கம் இராக்கியர்களையும் பக்கத்து நாடுகளையும் அமைதித் தீர்வுக்கு இணங்க வைப்பதே ஆகும். இந்த வார இறுதியில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கெர்ரி செல்ல உள்ளார்.
இராக்கில் அரசை எதிர்த்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தீவிரவாதி கள் கடுமையாக போராடி பல நகரங்களை தம் வசப்படுத்தியுள் ளனர். பாக்தாத் நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றனர்.
இராக் நிலவரம் பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் குழுவிடம் நீண்ட நேரம் வியாழக் கிழமை ஆலோசனை நடத்தினார் அதிபர் பராக் ஒபாமா.
இராக்கில் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் இணைந்து ஐக்கிய அரசு அமைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் 2011ல் அமெரிக்க படைகள் இராக்கை விட்டு வெளியேறின.
அதற்கு மாறாக, ஷியா பிரிவைச் சேர்ந்த பிரதமர் நூரி அல் மாலிகி, சன்னி பிரிவினருடன் விரோதம் வளர்த்துக் கொண்டதால் சன்னி தீவிரவாதிகள் சண்டையிட்டு மோசுல், திக்ரித் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை கைப்பற்றியுள்ளனர்.
இராக் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்பதே ஒபாமாவின் நிலைப் பாடாக இருந்து வருகிறது.
‘போர்ப் படைகளை இராக் அனுப்பமாட்டேன். ராணுவத்துடன் இணைந்து ஆலோசனை தருவதற் கான வாய்ப்பு பற்றி பரிசீலிப்போம்’ என நிருபர்களிடம் ஒபாமா வியாழக் கிழமை தெரிவித்தார்.
உளவுத் தகவல்களை திரட்டி ராணுவ தாக்குதல் நடத்துவதற் கான ஆலோசனை கூற 300 ராணுவ ஆலோசகர்களை இராக் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
தவிர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டால் குறிப்பிட்ட இலக்கு களை தாக்கும் திட்டத்தை பரிசீலிக்க இருக்கிறோம். அதற்கான சூழல் ஏற்பட்டால் நாடாளுமன்றத்துடன் ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு ஒபாமா நிருபர்களிடம் கூறினார்.
போர்க்குற்றம்
இதனிடையே, பொதுமக்கள் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது போர்க் குற்றத்துக்கு சமம் என எச்சரித் துள்ளது ஐ.நா. இராக் நெருக் கடிக்கு தீர்வு காண்பதற்கான எந்த நடவடிக்கையாக இருந்தாலும் முதன்மை கவனம் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு தருவது தான் என்று ஐநா பொதுச் செயலர் பான் கி மூனின் ஆலோ சகர்கள் அடாமா டியாங், ஜெனிபர் வெல்ஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் யோசனை
பாக்தாத் நோக்கி முன்னேறி வரும் சன்னி தீவிரவாதிகளை எதிர்த்து போரிட ஷியா பிரிவைச் சேரந்தவரான பிரதமர் நூரி அல் மாலிகியை சேர்த்தோ சேர்க்காமலோ ஐக்கிய அரசை அமைக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளது பிரான்ஸ். முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனுக்குச் சொந்தமான ரசாயன ஆயுத ஆலைகளில் ஒன்றை சன்னி தீவிரவாதிகள் கைப்பற்றியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் வாஷிங்டனில் தெரிவித்தார்.
அல் முத்தன்னா காம்ப்ளக்ஸ் என்ற இந்த ஆலையை தீவிரவாதி கள் ஆக்கிரமித்துள்ளனர். இதில் உள்ள பொருள்களை கொண்டு ஆயுதம் எதுவும் தயாரிக்க முடியாது. அங்கு உள்ள பொருள்கள் அனைத்தும் பழசானவை. எனினும் ராணுவ கேந்திரங்கள் கைப்பற்றப்படுவது ஆபத்தானது என்றார் வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ஜென் சாகி.