Published : 02 Mar 2021 01:17 PM
Last Updated : 02 Mar 2021 01:17 PM

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 279 மாணவிகள் விடுவிப்பு

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை நைஜீரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகளைத் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இச்சம்பவம் அந்நாட்டில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐக்கிய நாடுகள் சபை இச்சம்பவத்துக்குத் தனது கண்டனத்தையும், வருத்தத்தையும் பதிவு செய்தது.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் 279 மாணவிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவிகள் அனைவரும், அரசு நல விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் மாணவிகளைக் கடத்தியது எந்தத் தீவிரவாதக் குழு என்ற விவரமும், பேச்சுவார்த்தையில் தீவிரவாதிகள் எம்மாதிரியான கோரிக்கைகள் வைத்தனர் என்பதும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், எந்தத் தீவிரவாத அமைப்பும் இந்தக் கடத்தல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, 300க்கும் அதிகமான மாணவிகள் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் 279 மாணவிகள் கடத்தப்பட்டதாக நைஜீரிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நைஜீரிய நாட்டில் கடந்த சில வருடங்களாகவே தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

போகோ ஹராம்

2002-ல் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட போகோ ஹராம் இயக்கம், வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளாகத் தீவிரவாதச் செயலில் ஈடுபடத் தொடங்கியது.

போகோ ஹராம் தீவிரவாதிகள் இதுவரை சுமார் 27,000 பேரைக் கொன்றுள்ளனர். இதனால் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x