2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் செவிப்புலன் பிரச்சினையால் பாதிக்கப்படுவர்: உலக சுகாதார அமைப்பு

2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் செவிப்புலன் பிரச்சினையால் பாதிக்கப்படுவர்: உலக சுகாதார அமைப்பு
Updated on
1 min read

2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் செவிப்புலன் பிரச்சினையால் பாதிக்கப்படுவர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக, புதுப்புது வியாதிகளுக்கு மனித சமூகம் இடம் கொடுத்து வருகிறது. கடந்த ஒரு வருடமாக கரோனாவினால் ஏற்பட்ட இழப்புகளை முழுமையாக ஈடு செய்ய முடியாமல் பெரும்பான்மையான உலக நாடுகள் தவித்து வருகின்றன. இந்த நிலையில் புதிய அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “நமது வாழ்க்கை முறை தேர்வுகளால் 2050ஆம் ஆண்டுக்குள், உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் செவிப்புலன் பிரச்சினையால் பாதிக்கப்படுவர். அடுத்த 30 ஆண்டுகளில் செவிப்புலன் சார்ந்த பிரச்சினைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். 700 மில்லியன் மக்கள் தீவிரமாக பாதிக்கப்படுவர். எனவே, பாதிக்கப்பட்டவர்களின் உடல்நலம் மற்றும் அவர்களது நல்வாழ்வைக் காக்கத் தவறினால், இதற்கு நாம் அளிக்கும் விலை உயர்ந்ததாக இருக்கும். மேலும், தகவல் தொடர்பு, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிலிருந்து அவர்கள் விலக்கப்படுவதால் ஏற்படும் நிதி இழப்புகளும் அதிகமாக இருக்கும்.

மேலும், தற்போதைய சூழலில் செவிப்புலன் பிரச்சினை உள்ளவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் வளர்ச்சி குறைந்த நாடுகளில் வசிப்பதால், பெரும்பாலானவர்களுக்குத் தேவையான உதவி கிடைப்பதில்லை.

சிறந்த வசதிகளைக் கொண்ட பணக்கார நாடுகளில் கூட, அவர்களுக்கான கவனிப்புகள் பெரும்பாலும் சீரற்றதாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in