சவுதி இளவரசர் தாமதிக்காமல் தண்டிக்கப்பட வேண்டும்: ஜமால் காதலி செஞ்சிஸ் வலியுறுத்தல்

சவுதி இளவரசர் தாமதிக்காமல் தண்டிக்கப்பட வேண்டும்: ஜமால் காதலி செஞ்சிஸ் வலியுறுத்தல்

Published on

ஜமால் கொலை வழக்கில் எந்தவித தாமதமும் இல்லாமல் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜமாலின் காதலி ஹடிஸ் சென்ஜிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2018 ஆண்டு வெளியுறவு தூதரகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கொலையின் பின்னணியில் சவுதி இளவரசர் இருக்கிறார் அமெரிக்க அரசின் புலனாய்வு துறை கடந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சவுதிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஜமால் கொலை வழக்கில் சவுதி இளவரசர் தாமதிக்காமல் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜமாலின் காதலி ஹடீஸ் செஞ்சிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஹடீஸ் செஞ்சிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ எந்தவித குற்றமும் புரியாத, அப்பாவி மனிதரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் சவுதி இளவரசர் தாமதிக்காமல் தண்டிப்பட வேண்டியது அவசியம். இது ஜமாலுக்கு கிடைக்கும் நீதிமட்டுமல்ல, எதிர்காலத்தில் இம்மாதிரியான செயல்களை தடுக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அறிக்கையை சவுதி அரசு தவறானது, முற்றிலும் எதிர் மறையானது என்று விமர்சித்ததுள்ளது. இந்த நிலையில், மனித உரிமை மீறல்களுக்கு சவுதி நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். அதனை நாங்கள் நிச்சயம் செய்வோம்.

யார் இந்த ஜமால்?

ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980 களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

துருக்கியைச் சேர்ந்த ஹடிஸ் சென்ஜிஸ் ஜமாலை திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது.

மேலும், ஜமால் கொலை செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இளவரசர் முகமதுபின் சல்மான் இருப்பதாகவும் கூறியது. ஜமால் கொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் ஜமாலின் மரணத்தில் சவுதி இளவரசருக்குப் பங்கு இருக்கிறது என்று தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே அமெரிக்கா தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரை கவுரவப்படுத்தும் வகையில் கஷோகி சட்டம் என்றொரு சட்டத்தை அமெரிக்கா அமல்படுத்தியது. அதன்படி, பத்திரிகையாளர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவோரை அமெரிக்காவில் நுழையத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in