

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் கரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசர கால அனுமதி வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாக பெரும் சவாலாக இருக்கும் கரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன.
இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் இரண்டு தவணைகளாக வழங்கப்படக் கூடிய தடுப்பூசிகள். முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும்.
உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் ஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக் 5 போன்ற இன்னும் பல தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளே.
இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மட்டுமே ஒரே டோஸாக வழங்கப்படும் கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது.
இந்தத் தடுப்பூசிக்கு அமெரிக்கா, அவசர கால பயன்பாடு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது. வரும் மார்ச் இறுதிக்குள் தங்களின் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை 2 கோடி பேருக்கு விநியோகிக்க முடியும் என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை அனுமதியளித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கர்களுக்கு இது நற்செய்தி. கரோனா நெருக்கடி முடிவு காண முற்படும் நம் முயற்சிகளுக்கு இது ஊக்கமளிக்கும் செய்தி எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அமெரிக்கர்கள் தொடர்ந்து சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் ஏனெனில் புது வகை உருமாறிய கரோனாவால் இன்னும் அச்சுறுத்தல் தொடர்வதாக எச்சரித்தார்.
கரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரே டோஸாக வழங்கப்படும் ஜான்சன் அண்ட ஜான்சன் தடுப்பூசி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பரிசோதனையில் கரோனா தடுப்பில் 85.9% பலனளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பீட்டு அளவில் அமெரிக்காவில் தற்போது பயன்பாட்டில் உள்ள ஃபைஸர், மாடர்னா தடுப்பூசிகள் 95% அளவுக்கு பலனளிப்பதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.