

சிரியாவில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது, சிரியாவிலிருந்து செயல்படும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்கா மற்றும் இராக் பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இதற்கு எதிர்வினையாக அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்த ஜோ பைடன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகினர். அவர்களது நிலைகளும், வாகனங்களும் தாக்கி அழிக்கப்பட்டன.
இந்த நிலையில் இத்தாக்குதல் குறித்து பத்திரிகையாளர்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு ஜோ பைடன், “சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் ஈரானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும்” என்று பதிலளித்துள்ளார்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.
ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் சிரியாவில் இயங்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரியாவில் போர் குற்ற விதிமீறல்கள் நடந்து வருவதாக ரஷ்யப் போர் கண்காணிப்புக் குழு குற்றம் சுமத்தியது. இந்த நிலையில் அமெரிக்கா, சிரியாவில் இத்தகைய தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.