Last Updated : 27 Feb, 2021 08:00 AM

 

Published : 27 Feb 2021 08:00 AM
Last Updated : 27 Feb 2021 08:00 AM

பத்திரிகையாளர் கசோகி படுகொலைக்கு சவுதி இளவரசரே உத்தரவிட்டார்: அமெரிக்கா திட்டவட்டம்

பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலைக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானே உத்தரவிட்டார். அவரின் கவனத்துக்குச் செல்லாமல் இந்தக் கொடூர கொலை அரங்கேறியிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜமால் கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் இருந்து சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், கசோகி படுகொலை சவுதி இளவரசரின் அனுமதியோடே நடந்திருக்கிறது என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜமால் கசோகி சூழ்ச்சி செய்து இஸ்தான்புல் வரவழைக்கப்பட்டார். தனது காதலியுடன் துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்குள் சென்றவர் பின்னர் திரும்பி வரவேயில்லை.

தூதரகத்துக்குள்ளேயே அவர் படுகொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டுள்ளது. மேலும் அவரது சடலத்தை அமிலத்தை ஊற்றி அழித்துள்ளனர்.

இத்தகைய கொடூர செயலுக்கு நிச்சயமாக முகமது பின் சல்மான பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். கொலை நடந்த முறையே சவுதி இளவரசரின் பின்னணியை வெளிப்படையாக உணர்த்துகிறது எனத் தெரிவித்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரைக் கவுரப்படுத்தும் வகையில் கசோகி சட்டம் என்றொரு சட்டத்தை அமெரிக்கா அமல் படுத்தியது. அதன்படி, பத்திரிகையாளர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவோரை அமெரிக்காவில் நுழைய தடை விதித்தது. உடனடியாக சவுதியைச் சேர்ந்த 76 பேரை பிளாக் லிஸ்ட் செய்தது.

சவுதி அரசு மறுப்பு;

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை சவுதி அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை தொடர்பாக அமெரிக்கா எதிர்மாறையான, போலியான, ஏற்கமுடியாத அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க அறிக்கையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கையின் முடிவும் ஏற்கத்தக்கதல்ல. இவ்வாறு சவுதி அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x