

பாகிஸ்தானின் அணு ஆயுத உற்பத்திக்கு உலகநாடுகள் ஒன்று சேர்ந்து கடிவாளம் போட வேண்டிய நேரம் வந்து விட்டதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.
நவம்பர் 7-ம் தேதி வெளியான தலையங்கத்தில், “இந்தியாவுடனான போட்டியைக் காரணம் காட்டி பாகிஸ்தான் தனது அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருவது தோல்வியுறும் ஒரு ஆட்டமே. தனது பட்ஜெட்டில் 25% தொகையை ராணுவத்துக்குச் செலவிட்டு வருகிறது பாகிஸ்தான். எனவே நாட்டின் நீண்ட நாளைய நலத்துக்கு அதன் அணு ஆயுத உற்பத்திக்கு கடிவாளம் இட்டே ஆகவேண்டும். இல்லையெனில் பாகிஸ்தான் குடிமக்களுக்கு போதுமான சேவைகளை வழங்க முடியாத நிலை ஏற்படும்.
ஒரு அணு ஆயுதம் கூட வைத்திருக்காத ஈரானின் அணு ஆயுத நோக்கங்களை கட்டுப்படுத்த உலகத்தின் அதிகார நாடுகள் பல 2 ஆண்டுகளாக பேச்சு வார்த்தைகள் நடத்தின. ஆனால், இதனை ஒப்பிடும்போது பாகிஸ்தானுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் இல்லை. இதனால் பாகிஸ்தான், இந்தியாவும் கூட அணு ஆயுதத்திற்கு வரம்புள்ளது என்பதைக் கூட பரிசீலிக்க மறுத்து வருகிறது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்க வேண்டும், தற்போது இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதற்றச் சூழ்நிலைகளுக்கு மோடியும் ஒரு காரணம்.
இவ்வாறு அந்தத் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யாவுக்குப் பிறகு 120 அணு ஆயுதங்களுடன் பாகிஸ்தான் உலகின் 3-வது சக்தி வாய்ந்த அணு ஆயுத நாடாகும் என்று வெளியான செய்திகளை அடுத்து இந்தத் தலையங்கம் வெளியாகியுள்ளது.