

பைஸர் மருந்தின் ஒரு டோஸ் கரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரிட்டன் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கேம்பிரிட்ஜ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் கூறும்போது, “எங்களுடைய சுகாதார பணியாளர்களுக்கு பைஸர் மருந்தின் ஒரு டோஸை செலுத்தும்போது அது கரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கின்றது. அறிகுறிகளற்ற நோய் பரவலையும் தடுக்கின்றது என்பதை கண்டறிந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இஸ்ரேலில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலக நாடுகளின் பல தரவுகள் ஆராயப்பட்டதன் முடிவில், அனைத்து தரப்பு வயதினருக்கும் பைஸர் கரோனா தடுப்பு மருந்து சிறந்த பலனை அளிக்கிறது என்று வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
10 லட்சத்துக்கும் அதிகமான மக்களிடம் ஜர்னல் ஆஃப் மெடிசின் நடத்திய மருத்துவ பரிசோதனையிலும் பைஸர் கரோனா தடுப்பு மருந்து சிறந்த பலனை அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.
உருமாறிய கரோனா வைரஸ்
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.
மாடர்னா, பைஸர், ஜான்சன் & ஜான்சன் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.