அமெரிக்காவில் குடியுரிமை: கிரீன் கார்டு மீதான தடையை நீக்கினார் ஜோ பைடன்

அமெரிக்காவில் குடியுரிமை: கிரீன் கார்டு மீதான தடையை நீக்கினார் ஜோ பைடன்
Updated on
1 min read

அமெரிக்காவில் குடியுரிமைக்கு மிகவும் அவசியமான கிரீன் கார்டு பெறுவதற்கு முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்திருந்த கட்டுப்பாடுகளை தற்போது பொறுப்பேற்றுள்ள அதிபர் ஜோ பைடன் நீக்கியுள்ளார்.

கரோனா ஊரடங்கு காலத்தில் கிரீன் கார்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதால் ஏற்கெனவே ஹெச் 1-பி விசாவில் பணியாற்றும் இந்தியர்கள் பலருக்கு கிரீன் கார்டு கிடைக்க வழியேற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கிரீன் கார்டு என்பது அங்கு நிரந்தரமாக தங்குவதற்கு அனுமதிப்பதாகும்.

அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் நிபுணர்கள் பலரும் அங்கு ஹெச்-1பி விசாவில் தங்கிதான் பணிபுரிகின்றனர்.

ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதம் பேருக்கு மட்டுமே கிரீன் கார்டு வழங்கப்படும் என உத்தரவிட்டிருந்தது. இதனால் பெரும்பாலான இந்திய பணியாளர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க மேலும் தாமதமாகும் சூழல் உருவானது.

முந்தைய அதிபர் ட்ரம்ப் விதித்த தடையானது அமெரிக்காவின் நலனுக்கு பாதகமாகவே அமைந்துள்ளது. எனவே தடை நீக்கப்படுவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்கள் உலகம் முழுவதும் உள்ள திறமை மிக்க பணியாளர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு முந்தைய உத்தரவு தடையாக இருந்தது. அத்துடன் தனி நபர்களும் கிரீன் கார்டு கோரி விண்ணப்பிக்கவும் வழியேற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அமெரிக்காவில் தற்போது கிரீன் கார்டு அனுமதி கோரி 4,73,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். டொனால்டு ட்ரம்ப் விதித்த தடை காரணமாக இவர்களில் 1,20,000 பேரது விசா முடிவடைந்து விட்டது. தற்போது ஹெச் 1-பி விசா அடிப்படையில் கிரீன் கார்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளது பலருக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க வழியேற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in