

ஜப்பான் நாட்டில் அதிகரித்து வரும் தற்கொலைகளைத் தடுப்பதற்காக தனிமை அமைச்சகத்தை உருவாக்க பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜப்பானில் கரோனா பிரச்சினையால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் மற்றும் பல்வேறு நெருக்கடிகளால் 11 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் தற்கொலைகள் செய்து வருகின்றனர். இதனை தடுப்பதற்காக தனிமையை போக்கும் துறை உருவாக்கப்பட்டு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என பிரதமர் யோஷிஹிடே சுகா அறிவித்துள்ளார்.
உலகளவில் 2018-ல் பிரிட்டன் முதல் நாடாக தனிமைக்கான அமைச்சகத்தை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது ஜப்பானும் அத்தகைய முடிவு எடுத்துள்ளது.
கடந்த 12-ம் தேதி இதற்காக தனிமை அமைச்சகம் உருவாக்கப்பட்டு அதன் அமைச்சராக டெட்சுஷி சகமோட்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் சுகா கூறும்போது, “கரோனா உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் தனிமையால் வாடுகின்றனர். இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களது பிரச்சினைகளை இனம் கண்டு, அவற்றைத் தீர்க்கும் நடவடிக்களையும், கொள்கை முடிவுகளை அமைச்சர் சகமோட்டோ அறிவிப்பார்" என்றார்.
கடந்த 11 ஆண்டுகளில் முதன்முறையாக ஜப்பானில் தற்கொலை விகிதம் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக தனிமைத்துறை அமைச்சராக சகமோட்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் குறைந்து வரும் பிறப்பு விகிதப் பிரச்சினைகளையும் அமைச்சர் சகமோட்டோ கையாண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தனிமைக்கான அமைச்சர் சகமோட்டோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொற்றுநோய்களுக்கிடையே அதிகரித்து பெண்களின் தற்கொலை மரணங்கள் உள்ளிட்ட விவகாரங்களை ஆராய ஒரு செயல்திட்டத்தை பிரதமர் கேட்டுள்ளார். சமூக தனிமையை தடுப்பதற்கும், மக்களிடையேயான உறவுகளைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஜப்பானில் தனிமையாக இருப்பதென்பது நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினையாகும். இதனால் அவர்கள் தற்கொலை செய்யும் முடிவுக்கு வருகின்றனர். குறிப்பாக கரோனா பரவி வந்த காலத்தில் இந்த தற்கொலை விகிதம் அதிகமாக இருந்தது. 2020-ம் ஆண்டில் மட்டும் ஜப்பானில் 20,919 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்தனர் என்று ஜப்பான் தேசிய கொள்கை ஏஜென்சி தெரிவித்துள்ளது.