Published : 11 Nov 2015 01:46 PM
Last Updated : 11 Nov 2015 01:46 PM

விரைவில் இந்தியா செல்கிறேன்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகூ

விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ தெரிவித்துள்ளார்.

கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியா வரவுள்ள முதல் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ. கடைசியாக கடந்த 2003-ல் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷேரோன் இந்தியா வந்தார். அதற்கு மரியாதை செலுத்தும் வகையில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த மாதம் (அக்டோபர் மாதம்) குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்ரேல் சென்று வந்தார்.

இந்நிலையில், தான் விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ, "இஸ்ரேலிடமிருந்து உலக நாடுகள் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் தொழில்நுட்பம். அது நான் விரைவில் செல்லவிருக்கும் இந்தியாவாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி. இஸ்ரேலை தொழில்நுட்ப வல்லரசாக உருவாக்க வேண்டும் என்பதே எனது எதிர்கால லட்சியம்" எனக் கூறினார்.

அவரது இந்த பேச்சின் மூலம், அடுத்ததாக அவர் இந்தியாவுக்கே பயணம் மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.

2014 மே மாதம் மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இஸ்ரேல் - இந்தியா உறவு குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, பிரதமர் மோடி தான் இஸ்ரேல் செல்லயிருப்பதாக அறிவித்தார். இந்தியாவிலிருந்து இதுவரை எந்த ஒரு பிரதமரும் இஸ்ரேல் செல்லாத நிலையில் மோடியின் இஸ்ரேல் பயண அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், மோடியின் இஸ்ரேல் பயண தேதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.

கடைசியாக கடந்த ஆண்டு (2014-ல்) நியூயார்க்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூவும், இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து தி ஜெருசலேம் போஸ்ட் என்ற பத்திரிகைக்கு நெதன்யாகூ அளித்த பேட்டியில், "இந்தியா - இஸ்ரேல் உறவுக்கு வானமே எல்லை. இருநாடுகளுக்கும் பழமையான நாகரீகம், பழமையான ஜனநாயகம், பழம்பெரும் கலாச்சாரம் என நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இந்தியாவும், இஸ்ரேலும் எதிர்காலத்தை தன் வசப்படுத்த கடினமாக முயற்சித்து வருகின்றன" எனக் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x