Published : 24 Feb 2021 05:04 PM
Last Updated : 24 Feb 2021 05:04 PM

சிறு வயதில் இன ரீதியாக விமர்சித்த பள்ளித் தோழனின் மூக்கை உடைத்தேன்: ஒபாமா

சிறு வயதில் இன ரீதியாக விமர்சித்த பள்ளித் தோழனின் மூக்கை உடைத்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஸ்பாட்டிஃபையின் ரெனிகேட்ஸ் நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல பாடகர் ப்ரூஸ் ஸ்ப்ரிங்ஸ்டன்னுடன் பேசிய ஒபாமா தனது பள்ளிப்பருவ நிகழ்வு ஒன்றை நினைவுகூர்ந்தார்.

ஒபாமா கூறியதாவது:

சிறுவயதில் எனக்கொரு நண்பன் இருந்தான். நாங்கள் இருவரும் கூடைப்பந்து விளையாட்டு நண்பர்கள். அப்படி ஒரு நாள் பயிற்சி முடித்து லாக்கர் ரூம் திரும்பியபோது என் நண்பர் என்னை இன ரீதியாகக் காயப்படுத்தும் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினார்.

எனக்கு அந்த வார்த்தை கோபத்தை வரவழைத்தது. உடனே அவனது முகத்தில் ஓங்கிக் குத்தினேன். அதனால் என் நண்பனின் மூக்கு உடைந்தது. என்னை மீண்டும் அந்த வார்த்தையைச் சொல்லி திட்டக்கூடாது என்பதே எனது நோக்கமாக இருந்தது. உண்மையில் அந்த வார்த்தைக்கு அவனுக்கும் அர்த்தம் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அப்படிச் சொன்னால் நான் காயப்படுவேன் என்று அவனது புத்தியில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவனிடம் மீண்டும் அப்படிச் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினேன்.

இனரீதியாக வசைபாடுவது தன்னைப் பற்றி, தன் நிலை பற்றி ஒரு வகையான வரட்டு கவுரத்தைத் தருகிறது. நான் ஏழையாக, அறியாமை கொண்டவனாக, அழகற்றவனாக இருக்கலாம். நான் என்னையே வெறுப்பவனாக இருக்கலாம். மகிழ்ச்சியற்றவனாக இருக்கலாம். ஆனால், அவையெல்லாம் பிரச்சினையாக இருக்காது. நான் உங்களைப் போல் (வெள்ளை நிறத்தவராக) இல்லை என்பது மட்டுமே இங்கு பிரச்சினை. இந்த அடிப்படை மனோபாவம் தான் பின்னாளில் சமூகப்பார்வையாகவே மாறியது. அதனால் தான் இன ரீதியாக ஏமாற்று வேலைகள், திருட்டுகள், கொலைகள், பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன.

இன ரீதியான துன்புறுத்தல்கள் ஒருவருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவர் தன்னைப் பெற்று சிறுமையாக உணரச் செய்கிறது. தான் சமுதாயத்தில் முக்கியத்துவம் அற்றவரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
ஒபாமா அதிபராக இருந்தபோதும் சரி இப்போதும் சரி அவர் அவ்வப்போது அமெரிக்க சமூகத்தில் இன்றளவும் நிலவும் இனவெறி ஏற்படுத்தும் தாக்கம் குறித்துப் பேசிவருகிறார்.

2015ல் தெற்கு கரோலினாவில் ஒரு தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்துப் பேசிய ஒபாமா, இனவெறி இன்னும் இருக்கிறதா இல்லையா என்பது கேள்வியல்ல. ஒரு சமூகம் 200, 300 ஆண்டுகளாகப் பழகிய வழக்கத்தை ஒரே இரவில் அழித்துவிடாது என்று காட்டமாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x