

பாகிஸ்தானில் ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான மவுலானா சலாஹுதின் அயுபீ 14 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் டான் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ''பலுசிஸ்தான் மாகாணத்திலிருந்து எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டவர் மவுலானா. இவர் ஜுகுர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்துள்ளதாக கித்ரல் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்பு புகார் அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியுலகுக்குத் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட சிறுமி பள்ளியில் பயின்று வருவதால், அவர் திருமணம் செய்துகொள்ளும் வயதை அடையவில்லை. எனவே, மவுலானாவின் திருமணம் செல்லாது என்று மகளிர் அமைப்புகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் எம்.பி. மவுலானாவின் திருமணம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டு குறித்து மவுலானாவின் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
பாகிஸ்தானில் 16 வயதுக்கும் குறைவான பெண்களை மணப்பது சட்டப்படி குற்றமாகும்.