

அமெரிக்காவின் கோலோராடோ மாகாணத்தில் உள்ள குடும்ப கட்டுப்பாடு மையத்துக்குள் புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர். போலீஸாருடன் சுமார் 6 மணி நேரம் வரை சண்டையிட்ட அந்த மர்ம நபர், இறுதியில் சரணடைந்தார். இதனால் அங்கு நிலவிய பதற்றம் தணிந்தது.
சமீபத்தில் பாரீஸ் நகருக்குள் புகுந்து ஐஎஸ் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில் 130 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் கோலோராடோ மாகாணத்தில் உள்ள ஒரு குடும்ப கட்டுப்பாடு மையத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் புகுந்தார். அங்கிருந்த பெண்கள், நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்த மர்ம நபர், தன்னை சுற்றிவளைத்த போலீஸாரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.
இதனால், மர்ம நபருக்கும், போலீஸாருக்கும் இடையே ஆறு மணி நேரம் வரை துப்பாக்கிச் சண்டை நீடித்தது. ஒரு கட்டத்தில் பிணைக் கைதிகளை பிடிக்க போலீஸார் ஆக்ரோஷமாக மோதினர். இதன் காரணமாக அந்த மர்ம நபர் சரணடைந்தார். இதையடுத்து பிணைக் கைதிகளை போலீஸார் பத்திரமாக மீட்டனர். மேலும் படுகாயமடைந்தவர்களையும் மருத்துவமனையில் அனுமதித் தனர். இதன் பிறகே அங்கு நிலவிய பதற்றம் தணிந்தது.
சரணடைந்த அந்த மர்ம நபர் எதற்காக துப்பாக்கியுடன் குடும்ப கட்டுப்பாடு மையத்துக்குள் புகுந்தார்? அவரது நோக்கம் என்ன? என்பது குறித்து போலீஸாரும், எப்பிஐ அதிகாரிகளும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடும்ப கட்டுப்பாடு மையத்துக்குள் வெடிகுண்டுகள் ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா என்றும் சோதனை நடத்தினர்.
இதற்கிடையில், இந்த சம்பவத்துக்கு அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித் திருப்பதாகவும், நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.