

பாரீஸ் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இசைக் கச்சேரி அரங்கு, கால்பந்து மைதானம், ஓட்டல்கள் என 6 இடங்களில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் இரவு திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தை அடுத்து பிரான்ஸ் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் பதற்றமான சூழ்நிலை எழுந்துள்ளன. ஐரோப்பா முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தலைநகர் பாரீஸில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஈபிள் டவர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அனைத்து பாதுகாப்புப் படை யினரும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே கட்டுப்பாட்டின் கீழ் செயல் படுகின்றனர். பிரான்ஸின் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டு யாரையும் எங்கும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3 நாட்கள் துக்கம் கொண்டாட அதிபர் ஹோலாந்தே அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்ஸில் உயிரிழந்தவர்களுக்காக அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உட்பட உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்திய தூதரக ஹெல்ப்லைன் எண்
பாரீஸ் தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பலியானதாக இதுவரை தகவல்கள் இல்லை. இருந்தாலும் அங்குள்ள இந்திய தூதரகம் ஹெல்ப்லைன் எண்ணை அறிவித்துள்ளது. பாரீஸில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இந்தியா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன் என பிரான்ஸ் நாட்டுக்கான இந்தியத் தூதர் மோகன் குமார் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். அதோடு, மேலும் விவரம் அறிய 0140507070 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
மும்பை பாணியில் தீவிரவாதத் தாக்குதல்
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதல் பாணியில் பாரீஸில் தாக்குதல் நடந்துள்ளது. மும்பையில் தீவிரவாதிகள் பல குழுக்களாகப் பிரிந்து துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் ஒரே நேரத்தில் பலரை கொன்றனர்.
பாரீஸிலும் அதே பாணியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரே நேரத்தில் விளையாட்டு மைதானம், ஓட்டல்கள், இசை அரங்குகள் என 6 இடங்களில் தாக்குதல் நடத்தி யுள்ளனர். மும்பையை போலவே பல இடங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அதேபோல் கண்ணில் பட்டவர்களை எல்லாம் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியுள்ளனர்.
அல் காய்தா அமைப்பின் தலைவனாக இருந்த ஒசாமா பின் லேடன், மும்பை தாக்குதல் பாணியில் ஐரோப்பிய நாடு களில் தீவிரவாதத் தாக்குதலை நடத்த வேண்டும் என தனது அமைப்பினருக்கு உத்தரவிட் டிருந்தான். இப்போது நடந்திருப் பதை பார்க்கும்போது, அதுதான் நினைவுக்கு வருகிறது என பிரான்ஸ் நாட்டு விமானப் படையின் முன்னாள் ஜெனரல் மைக்கேல் ஹைடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சிஐஏ உளவுத் துறை முன்னாள் அதிகாரி ஜேக் ரைஸ் கூறியதாவது: 2001-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் இரட்டை கோபுரத்தை அல்-காய்தா தீவிரவாதிகள் தகர்த் தனர். அப்போதே பிரான்ஸ் விழிப்படைந்திருக்க வேண்டும்.
அண்மையில் சார்லி ஹேப் டோ பத்திரிகை அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன் பிறகாவது பிரான்ஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதால் இப்போது பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்க நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு
பாரீஸ் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயார்க், பாஸ்டன் நகரங்களில் தீவிரவாத தடுப்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மான்ஹாட்டனில் உள்ள பிரான்ஸ் நாட்டுத் தூதரகத்தைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கியமான இடங்கள் அனைத்திலும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நியூயார்க் காவல் துறை தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கண்டனம்
பாரீஸ் தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து லண்டனில் நேற்று அவர் கூறியதாவது: இது பாரீஸ் நகரம் மீதோ, பிரெஞ்சு குடிமக்கள் மீதோ, பிரான்ஸ் நாட்டின் மீதோ நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல். தீவிர வாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும்.
ஐ.நா. சபை இப்போது தனது 70-வது ஆண்டு விழாவை கொண்டாடி கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தீவிரவாதம் என்றால் என்ன என்று விதிகளை வரையறுத்து நேரத்தை வீணடிக்கக் கூடாது. தீவிரவாதத்தால் யார் பாதிக்கப்படுகிறார்கள், தீவிரவாதத்துக்கு யார் ஆதரவு அளிக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள், ஆதரிப்பவர்களை வேரோடு அழிக்க வேண்டும். உலகில் எந்தவொரு நாட்டிலும் இனிமேல் தீவிரவாதத்தால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் தீவிரவாதிகள் வீடியோவில் மிரட்டல்
சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் மீது விமானத் தாக்குதலை பிரான்ஸ் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், இப்படித்தான் தாக்குதல் நடக்கும் என ஐஎஸ் தீவிரவாதிகள் வீடியோ மூலம் மிரட்டியுள்ளனர்.
ஐஎஸ் அமைப்பின் பத்திரிகை தொடர்பு பிரிவான அல்ஹயாத் மீடியா மையம் இந்த மிரட்டலை வெளியிட்டுள்ளது. சிரியாவில் பிரான்ஸ் விமானம் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்துவதை நிறுத்தும்வரை, பிரான்ஸ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. அருகில் இருக்கும் சந்தைக்கு போவதற்கு கூட பயப்படும் நிலை வரும் என ஐஎஸ் தீவிரவாதி வீடியோவில் மிரட்டியுள்ளான்.