

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதுகுறித்து இந்தோனேசிய வானிலை மையம் தரப்பில், “ இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஜகர்த்தாவில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த வாரம்வரை கனமழை நீட்டிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பாதிப்பைக் குறைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கிழக்கு ஆசியாவில் தற்போது கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தோனேசியா அறியப்படுகிறது. இந்நிலையில், பைசர் கரோனா தடுப்பு மருந்து மற்றும் சீனாவின் கரோனா தடுப்பு மருந்துகளை இந்தோனேசியா செலுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் சுமார் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.