

உலகம் முழுவதும் கரோனா குறைந்து வருவதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஹான்ஸ் ஹாப்கின்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “ அக்டோபர் மாதத்துக்கு பிறகு உலக அளவில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களாக கரோனாவினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 10,000-க்கு குறைவாக உள்ளது.
கரோனா தடுப்பு மருந்துகள் பல நாடுகளில் போடப்பட்டு வருவதன் விளைவாக கரோனா தொற்று குறைந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.