

பாரீஸ் தாக்குதல்களுக்குப் பிறகே ரஷ்யா தனது கவனத்தை ஐஎஸ் பயங்கரவாதம் குறித்து திருப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
மனிலாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஒபாமா, இது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் விவாதிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
சிரியா அகதிகளை அமெரிக்கா வரவேற்பது பற்றி, இடர்ப்பாடு குறித்த அதீதமான மற்றும் ஆவேசமான, பீதியும் வெறியும் நிறைந்த எதிர்ப்புகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து வெளிவருவதை ஒபாமா கண்டித்தார். "இவ்வகையான எதிர்வினைகள் நிறுத்தப்பட வேண்டும், உலகம் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது" என்றார்.
குடியரசுக் கட்சித் தலைவர்கள் சிரியா அகதிகள் பற்றி கூறும் வார்த்தைகள் வசைகளாக உள்ளது அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றார். "கணவனை இழந்த பெண்கள் மற்றும் அனாதைகள் அமெரிக்காவுக்குள் வருவதை அவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது" என்று கூறினார் ஒபாமா.
குடியரசுக் கட்சித் தலைவர்களின் ஊதிப்பெருக்கப்பட்ட வசைமொழி அல்லது பீதிமொழியே ஐஎஸ் அமைப்பு ஆட்களை தேர்வு செய்வதற்கு ஒரு காரணமாக அமைந்து விடும் என்று எச்சரித்தார் ஒபாமா. அமெரிக்காவுக்குள் அகதிகள் நுழையும் நடைமுறை விதிகள் கறாரானவை. எனவே எதிர்கட்சியினரின் வெறி/பீதி மற்றும் சிக்கல்கள் குறித்த அதீத கற்பனைகள் கொண்டு அரசு செயல்பட முடியாது என்று மேலும் வன்மையாக தெரிவித்துள்ளார் ஒபாமா.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜெப் புஷ் சிரியா கிறிஸ்துவர்களை மட்டும் அமெரிக்காவில் அனுமதிக்குமாறு கூறியதைக் கண்டித்த ஒபாமா, “கிறித்துவர்களை மட்டும் அனுமதிப்பது அமெரிக்க மதிப்பீடுகளுக்கு முரணான அரசியல் நாடகமாகவே அமையும் என்றார்.
அகதிகளை அமெரிக்காவில் நுழைய அனுமதி அளிக்கும் நடைமுறை 18 முதல் 24 மாதகாலம் நீடிப்பதாகும். அமெரிக்க உளவுத்துறை, பிற முகமைகள், பயோமெட்ரிக்ஸ் என்று மிகவும் கறாரான நடைமுறைகளைக் கொண்டது. எனவே அகதிகளுடன் ஐஎஸ் தீவிரவாதிகள் நுழைந்து விடுவார்கள் என்ற அச்சம் இப்போதைக்குத் தேவையில்லை என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.