தீவிரவாதத்தை எதிர்த்து போரிட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: துருக்கியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

தீவிரவாதத்தை எதிர்த்து போரிட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: துருக்கியில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
Updated on
1 min read

மூன்று நாள் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, துருக்கியின் அன்டல்யா நகருக்கு சென்றார். அங்கு நேற்று தொடங்கிய 2 நாள் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.

மாநாட்டின் இடையே, பிரேசில் அதிபர் தில்மா ரூசெப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தென்னாப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகிய பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் தனியாக சந்தித்துப் பேசினர்.

அப்போது நரேந்திர மோடி பேசியதாவது:

பாரீஸில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலுக்கு நமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வோம். தீவிரவாதத்துக்கு எதிராக மனித சமுதாயம் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

2016, பிப்ரவரி 1-ம் தேதி ‘பிரிக்ஸ்’ அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ள இந்தியா, தீவிரவாதத்தை ஒழிக்க முன்னுரிமை கொடுக்கும். இந்த 5 நாடுகள் அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்கும்போது, பிரிக்ஸ் (பிஆர்ஐசிஎஸ்) என்பதன் கருப்பொருள், கட்டுமானம் (பில்டிங்), பதில் அளிக்கத்தக்க (ரெஸ்பான்சிவ்) அனைவரையும் உள்ளடக்கிய (இன்குலூசிவ்) மற்றும் கூட்டு தீர்வு (கலெக்டிவ் சொலூஷன்ஸ்) என்பதாக இருக்கும்.

தற்கொலைப்படை தாக்குதலில் 4 பேர் காயம்

துருக்கியின் அன்டல்யா நகரில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், அன்டல்யா நகரிலிருந்து 300 கி.மீ. தொலைவில் சிரியா எல்லை அருகே உள்ள காசியன்டெப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் 4 போலீசார் காயம் அடைந்தனர். இது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் சதி வேலையாக இருக்கும் என்று கூறப்படுகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in