

உலக வர்த்தக நிறுவனத்தின் தலைவராக நைஜீரியா நாட்டின் பொருளாதார நிபுணரும், முன்னாள் நிதியமைச்சருமான நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலக வர்த்தக அமைப்பு உலகம் முழுவதும் வர்த்தகம் மற்றும் வரியைக் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே உலக வர்த்தக அமைப்பு சவால்களைச் சந்தித்து வந்தது.
நைரோபியில் 2015-ல் நடந்த உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக - பொருளாதார அமைச்சர்கள் மாநாட்டின்போதே, அந்த அமைப்பை வலுவிழக்க அமெரிக்கா முயற்சி எடுத்து வந்தது. இக்கரோனா காலகட்டத்திலும் உலக வர்த்தக அமைப்பு கடுமையான நெருக்கடியைச் சந்தித்தது.
இந்த நிலையில் உலக வர்த்தக நிறுவனத்தின் தலைவராக நைஜீரியா நாட்டின் பொருளாதார நிபுணரான நிகோஸி ஒகோன்ஜோ இவீலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் உலக வர்த்தக நிறுவனத்தின் முதல் பெண் தலைவர், முதல் ஆப்பிரிக்கப் பெண் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிகோஸி ஒகோன்ஜோ இவீலா முன் ஏராளமான சவால்கள் உள்ளன என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நிகோஸி ஒகோன்ஜோ இவீலா செய்தியாளர்களிடம் பேசும்போது, “கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாம் முழுமையாகவும், விரைவாகவும் மீட்க வேண்டுமென்றால் ஒரு வலுவான உலக வர்த்தக அமைப்பு மிக முக்கியமானது. உலகளாவிய பொருளாதாரம் மீண்டு வர எங்களுக்குத் தேவையான கொள்கைகளை வடிவமைத்துச் செயல்படுத்தும் உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.