

அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கரோனா வைரஸ் தடுப்பூசியை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம் என அனுமதி அளித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு இதுவரை பைஸர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியை மட்டுமே அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்திருந்தது. இப்போது 2-வது தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ''அஸ்ட்ராஜென்கா கரோனா தடுப்பூசி இரு இடங்களில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆஃப் இந்தியா, தென் கொரியாவிலும் தயாரிக்கப்படுகிறது. இரு கரோனா தடுப்பூசிகளையும் அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் மருந்துகள், மருந்துப் பொருட்கள் பிரிவின் துணை இயக்குநர் மரியேஞ்சலா சிமாவோ கூறுகையில், “இதுவரை கரோனா தடுப்பூசிகளைப் பெறாத நாடுகள் இனிமேல் கரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தங்கள் மக்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தொடங்கலாம். இந்த அனுமதி மூலம் அடுத்து வரும் நாட்களில் பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கில் மருந்துகள் ஏற்றுமதி செய்ய வழி ஏற்படும்” எனத் தெரிவித்தார்.
அஸ்ட்ராஜென்கா தடுப்பூசிக்கு ஏற்கெனவே இந்தியா, பிரிட்டன், மெக்சிகோ, அர்ஜென்டினா உள்ளிட்ட 50 நாடுகள் அனுமதி அளித்துள்ளன. பைஸர் மருந்தைவிட அஸ்ட்ராஜென்கா மருந்து விலை குறைவு, கையாள்வது எளிது.
அஸ்ட்ராஜென்கா மருந்தைப் பாதுகாக்க அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. ஒரு நபருக்கு இரு முறை அஸ்ட்ராஜென்கா டோஸ் வழங்கினால் போதுமானது. வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள், வளர்ச்சி குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடுகளுக்கு அஸ்ட்ராஜென்கா தடுப்பூசிகள் ஏற்றவை.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியைப் போடலாம் என்று கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.