

லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறான் 5 வயது ராம்செஸ் சங்குனோ. இதுவரை 7 மொழிகளைக் கற்றிருக்கிறான். மிகக் கடினமான கணிதப் புதிர்களை விடுவித்திருக்கிறான். நாம் மனத்தில் நினைக்கும் எண்களைக் கூட தன்னுடைய நுண்ணுணர்வு மூலம் சொல்லி விடுகிறான்.
‘‘மற்ற குழந்தை களைப் போல இவன் பொம் மைகளை விரும்பியதில்லை. பிறந்த 12-வது மாதத்திலேயே படிக்க ஆரம்பித்துவிட்டான். ஆங்கிலம், ஸ்பானிஷ், கிரேக்கம், ஜப்பானிய மொழிகளில் வார்த்தை களைச் சொல்ல ஆரம்பித்து விட்டான். 18 மாதங்களில் பெருக்கல் கணக்குகளைப் போட ஆரம்பித்துவிட்டான். 3 வயதில் ஹிந்தி, அரபிக், ஹீப்ரு மொழிகளை வீட்டிலுள்ள கம்ப்யூட்டர் மூலம் கற்றுக்கொண்டான். பள்ளியில் சேர்த்தபோது இவன் ஒருவன் மட்டுமே படிக்கக்கூடியவனாக இருந்தான். ஆசிரியர் இவனை மற்ற குழந்தைகளில் இருந்து தனித்து உட்கார வைத்துவிட்டார்.
உடனே பள்ளியில் இருந்து அழைத்து வந்துவிட்டேன். இப்போது வீட்டிலிருந்தே படிக்கிறான். மருத்துவர்கள் சொல்வதைப் போல என் மகனுக்குச் சிறப்பான கல்வி அளிக்கப்பட்டால், உலகிலேயே அற்புதமான மனிதனாக வருவான். ஒருவேளை புற்றுநோய்க்குக் கூட இவனால் மருந்து கண்டுபிடிக்கப்படலாம். அவ்வளவு திறமை இவனிடம் இருக்கிறது’’ என்கிறார் ராம்செஸின் அம்மா நிக்ஸ். ராம்செஸைப் பரிசோதித்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் பாவெல், ‘‘மருத்துவர்கள் டெலிபதியை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் 17 எண்களில் 16 எண்களைச் சரியாகச் சொல்லும்போது அதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. ராம்செஸுக்குச் சரியான கல்வி அளிக்கப்படுமானால், அவனுடைய புத்திசாலித்தனம் உலகத்துக்குப் பயன்படும்’’ என்கிறார்.
அடடா! அதிசயக் குழந்தை!
டோக்கியோவில் ஷாங்ரிலா என்ற கஃபே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானிய இளைஞர்கள் மத்தியில் உடல் பருமன் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களின் மனநிலையை மாற்றுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது ஷாங்ரிலா கஃபே. இங்கே வேலை செய்யும் அனைத்துப் பெண்களும் உடல் எடை அதிகம் உடையவர்கள்.
ஆனால் இங்கே உடல் ஆரோக்கியம் கெடுக்கும் நொறுக்குத் தீனிகள் இங்கே விற்கப்படுவதில்லை. ரசாயனம் இன்றி விளையும் பொருட்களைக் கொண்டு, சுடச் சுட உணவு தயாரித்து வழங்குகிறார்கள். ஆரம்பித்த சிறிது காலத்திலேயே ஷாங்ரிலா மிகப் பிரபலமாகிவிட்டது. இங்கே வரும் உடல் பருமன் மக்கள், தாழ்வுமனப்பான்மை போய்விட்டதாகச் சொல்கிறார்கள்.
ஆரோக்கியமே அழகு…
இங்கிலாந்தில் வசிக்கிறார் ஜான் டெய்லர். சமீபத்தில் 9 வாரப் பயணமாக பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவருடன் 10 வயது ஜாக் ரஸ்ஸெல் என்ற நாயும் கலந்துகொண்டது.
‘‘ஜாக் மாதிரி பயணத்துக்குச் சிறந்த நண்பனைப் பார்க்கவே முடியாது. எது கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டுக்கொள்வான். நடப்பான், ஓடுவான், மலையில் ஏறுவான், படகில் பயணிப்பான், தண்ணீரில் நீந்தி தனக்கான உணவை வேட்டையாடுவான். விமானம் முதல் மனிதர்கள் வரை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஜாக் மூலம் கற்றுக்கொள்ளலாம். இனி என் பயணங்களில் ஜாக் நிச்சயம் இடம்பெறுவான்’’ என்கிறார் ஜான் டெய்லர்.
உற்ற தோழன்!