செனட் சபையில் ஆதரவு கிடைக்காததால் கண்டன தீர்மான புகாரில் இருந்து முன்னாள் அதிபர் ட்ரம்ப் விடுவிப்பு

செனட் சபையில் ஆதரவு கிடைக்காததால் கண்டன தீர்மான புகாரில் இருந்து	முன்னாள் அதிபர் ட்ரம்ப் விடுவிப்பு
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சிவேட்பாளர் ஜோபைடன் வெற்றி பெற்றார். ஆனால்,தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குடியரசுக் கட்சி வேட்பாளரும் அப்போதைய அதிபருமான ட்ரம்ப் குற்றம் சாட்டி தொடர்ந்துஎதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இதற்கிடையில், அதிபராக பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க கடந்த ஜனவரி 6-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடோல் பகுதியில் ட்ரம்ப்ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வன்முறையில் ஈடு பட்டனர்.

இதையடுத்து, வன்முறையை தூண்டிவிட்டதாக ட்ரம்ப் மீது நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானம் மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின், 2 நாட்களுக்கு முன்னர் செனட் சபையில் தீர்மானம் கொண்ட வரப்பட்டது. அதன்மீது உறுப்பினர்கள் கடும் விவாதம் நடத்தினர். பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

செனட் சபையில் மொத்தம் உள்ள100 உறுப்பினர்களில் மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு (67) இருந்தால்தான் கண்டன தீர்மானம் நிறைவேறும். ஆனால், ட்ரம்ப்புக்கு எதிராக 57 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து கண்டன தீர்மான புகாரில் இருந்து கடந்த சனிகந்கிழமை ட்ரம்ப் விடுவிக்கப்பட்டார்.

இதை வரவேற்று ட்ரம்ப் கூறும்போது, ‘‘நமது வரலாற்று சிறப்புமிக்க, தேசப்பற்றுள்ள, அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக்குவோம் என்ற அழகிய முழக்கம் தற்போதுதான் தொடங்கி உள்ளது’’ என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘நமக்கு முன்பு நிறைய பணிகள் இருக்கின்றன. பிரகாசமான, துடிப்புள்ள எல்லையில்லா அமெரிக்காவின் எதிர்காலத்துக்காக தொலைநோக்கு இலக்குடன் விரைவில் ஒன்றிணைவோம்’’ என்று தெரிவித்தார்.

முன்னதாக செனட் சபையில் வாக்கெடுப்பு நடந்த போது, ஆளும் ஜனநாயக கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து, குடியரசு கட்சி உறுப்பினர்கள் 7 பேர் ட்ரம்ப்புக்கு எதிராக வாக்களித்தனர். எனினும், குடியரசு கட்சியை சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் ட்ரம்ப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in