Published : 14 Feb 2021 12:00 PM
Last Updated : 14 Feb 2021 12:00 PM

பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் தொலைபேசியில் பேச்சு: 5 லட்சம் கரோனா தடுப்பு மருந்து வழங்க இந்தியா ஒப்புதல்

கோப்புப் படம்

புதுடெல்லி

கனடாவுக்கு 5 லட்சம் டோஸ்கள் கரோனா தடுப்பூசி மருந்து அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கரோனாவுக்கு எதிராக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் இணைந்து தயாரித்த கோவாக்ஸின் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ரஜென்கா, சீரம் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தற்போது நாட்டில் முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இதுவரை அனைத்து மாநிலங்களிலும் 82 லட்சம் சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்களுக்கு தடுப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் தொடர்ந்து கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் மட்டுமின்றி அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம், இலங்கை, பூடான் போன்ற நாடுகளுக்கும் இந்திா வழங்கி வருகிறது. குறிப்பிட்ட அளவு தடுப்பு மருந்தை இந்திய அரசு இலவசமாக மற்ற நாடுகளுக்கு அனுப்பி வருகிறது.

இது தவிர சிறப்பு விமானங்கள் மூலம் செஷல்ஸ், மொரிஷியஸ், மியான்மர் நாடுகளுக்கும், ஒப்பந்த அடிப்படையில், சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, வங்கதேசம், பிரேசில், மியான்மர் நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, பிரேசில் அதிபர் ஜேர் போல்சனோரா, கரோனா தடுப்பு மருந்து அனுப்பி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

அந்த ட்விட்டர் செய்தியில், கடவுள் ஹனுமன் படத்தைப் பதிவிட்ட பிரேசில் அதிபர், ஹனுமன் சஞ்சீவி மலையை தூக்கிச் சென்று பறப்பது போன்றும், அந்தமலையில் தடுப்பூசி இருப்பது போன்றும் படம் அமைக்கப்பட்டுள்ளது.

ராமாயணத்தில் நடக்கும் போரில், லட்சுமணன் மயங்கிச் சரிந்தபோது, ஹனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்துக் கொண்டுவருவார். அதை நினைவுகூரும் வகையில் ஹனுமன் படத்தை பிரேசில் அதிபர் போல்சனோரா பதிவிட்டுள்ளார்.

கனடாவுக்கு 5 லட்சம் டோஸ்கள் கரோனா தடுப்பு மருந்து அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக கனடா அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.

இந்தநிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் மோடியை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதனையடுத்து 5 லட்சம் தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இந்த கருத்து தேவையற்றது, உண்மையை முழுமையாக அறியாமல் இந்தியாவின் உள்ள விவகாரங்கள் குறித்து ட்ரூடோ பேசியுள்ளார் என்று மத்திய அரசு கண்டனம் தெரிவித்து இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x