

இராக்கின் மொசுல் நகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 40 இந்தியர்கள் நிலை என்னவாயிற்று என தெரியவில்லை. அவர்கள் கடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த வாரம் மொசுல் நகரை கைப்பற்றினர். அப்போது, தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பிக்க சிலர் பாக்தாத் நோக்கி புறப்பட்டனர். அவர்களில் இந்தியர்கள் பலரும் அடங்குவர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள் மொசுல் நகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மொசுல் நகரம் தீவிரவாதிகள் பிடியில் வந்ததை அடுத்து, பாக்தாத் தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களை சுற்றிவளைத்து சிறைபிடித்த தீவிரவாதிகள் அவர்களை வேறு இடத்துக்கு கடத்திச் சென்றுள்ளனர்.
தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பியவர்கள் இத்தகவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்களை எப்படி மீட்பது என்பது குறித்து ஆலோசித்து வருவதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இராக்குக்கான முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டி இன்று (புதன் கிழமை) இரவு இராக் புறப்பட்டுச் செல்வார் என வெளியுறவு அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
சுரேஷ் ரெட்டிக்கு இராக் நாடு மிகவும் பரிச்சயமானது என்பதாலும், அந்நாட்டு அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்வது எளிமையானது என்பதாலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுதவிர, திக்ரித் மருத்துவமனைகளில் சிக்கியிருக்கும் 46 செவிலியர் நிலை குறித்து அரசு கவலை கொண்டிருப்பதாகவும், அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.